
அயோத்திதாசர்
அயோத்திதாசரைக் கொண்டாடுதல் என்றால் ஒடுக்கப்பட்டதைக் கொண்டாடுதல் என்று அர்த்தம். ஒடுக்கப்பட்டவன், ‘அனாதையாக வீழ்ந்து கிடக்கும் பிணம்’ என்று கருதுகிற தேசத்தில் இந்தக் கொண்டாட்டம் அவசியம். அவனுக்குத் தெளிவான அடையாளங்கள் இருக்கின்றன என்று சொல்ல வேண்டியிருக்கிறது. அவனே இந்த தேசத்தில் நீதிக்காகவும், நியாயத்திற்காகவும், உண்மைக்காகவும், ஒழுக்கத்திற்காகவும் போராடியவன்.
இன்று, சூழ்ச்சிகளின் மத்தியில் குற்றுயிராய்க் கிடக்கிறான் என்று நிரூபிக்க வேண்டியிருக்கிறது. அநீதிகள் மலிந்த நாட்டில் நீதியைப் பேசுகிறவர்களே ஊர் நீக்கம் செய்யப்பட்டிருப்பார்கள் என்று அறிவுறுத்த வேண்டியிருக்கிறது. கல்வி செத்த நாட்டில் அறிவாளியே தீண்டத்தகாதவர். மொழி சிதைந்த ஊரில் அர்த்தம் தெரிந்தவர்களுக்கே பேச்சு வராது. ‘அயோத்திதாசர்’ என்றால் ஒடுக்கப்பட்டவனின் சுயம் என்று பொருள். ஒடுக்கப்படுதலை இவரை விடவும் வலிமையாய் கற்பனை செய்த சிந்தனையாளர் உலக வரலாற்றில் யாருமில்லை.’
