top of page

அயோத்திதாசரும் இளையராஜாவும்

கோட்டிங்கன் வந்ததிலிருந்தே கஜீ (கஜேந்திரன் அய்யாதுரை), ‘Trou வுக்கு போக வேண்டும் தர்மு. உனக்கு அது பிடிக்கும்’ என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.


Trou ஒரு மதுக்கூடம். ஜெர்மன் மொழியில் ‘துளை’ என்று அர்த்தம். நேற்று அங்கே போயே விட்டோம். அது ஒரு நிலவறை. தரையிலிருந்து கீழிறங்கிய ஒரு துளையின் வழியாக அதற்குள் நுழைய வேண்டியிருந்தது. கருங்கற்களால் அமைக்கப்பட்ட சுரங்கப்பாதைகள் நாலாபக்கமும் விரிந்து செல்கின்றன. ‘இரண்டாம் உலகப் போரின் போது, நேச நாடுகளின் விமானத் தாக்குதலிலிருந்து தப்பிக்க, கோட்டிங்கன் பல்கலைக்கழக பேராசிரியர்கள் பதுங்கியிருந்த இடம் இது’ என்று உள்ளூர் வரலாறு சொன்னார்கள். ஜெர்மனியெங்கும் பியர் வெள்ளமாய் பாய்கிறது. நேற்றைக்கு கோதுமையிலிருந்து வடிக்கப்பட்ட பியரை (weisenbier) வாங்கி வாங்கி குடித்துக் கொண்டிருந்தோம். பேச்சு அங்கே இங்கே சுத்தி விட்டு, அயோத்திதாசரில் வந்து நிலைகொண்டது. கஜீ, அயோத்திதாசரின் தமிழ் பெளத்தம் என்ற அவரது நூலை எழுதிக் கொண்டிருக்கிறார். நானும் அயோத்திதாசர் பற்றிய எனது அடுத்த நூலை எழுதிக் கொண்டிருக்கிறேன். ஒரே நேரத்தில் இப்படி இருவர், அயோத்திதாசர் பற்றி, கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் அமர்ந்து கொண்டு, ஆய்வுகளை செய்து கொண்டிருக்கிறோம் என்ற விஷயமே ஒரு வித மனக் கிளர்ச்சியை எங்களுக்கு ஏற்படுத்தியிருந்தது. போதாக்குறைக்கு அந்த நிலவறை மதுக்கூடத்தின் ரம்மியம்… அயோத்திதாசர் மாதிரியான நபர்களை அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தின் வரலாற்று நிகழ்வுகளோடு, அரசியல் சூழலோடு, சமூக ஒழுங்கமைப்புகளோடு விளங்கிக் கொள்வதற்கு ஏராளமான முறையியல்கள் உள்ளன. ஆனால், இவையனைத்தையும் தாண்டி, ஏழு முழு வருடங்கள் ‘தமிழன்’ என்ற பத்திரிகை மூலம் தொடர்ச்சியாகக் கட்டுரைகளை எழுதி எழுதி மேற்சென்ற அந்தக் கையைக் கற்பனை செய்வது எப்படி? அந்த மனிதர் எப்படிப்பட்டவர் என்பதை அவருடைய எழுத்துகளிலிருந்து யூகிக்க முடியுமா? அந்த ஒவ்வொரு கட்டுரையும் எழுதப்பட்ட சம்பவத்தை மனதளவில் திரும்ப நிகழ்த்திப் பார்க்க முடியுமா? ஒரு மனிதரின் எழுத்துகளின் வழியே அவருடைய மூளைக்குள் குதித்து விடுவது எப்படி? எந்தவொரு பனுவலையும் இப்படி வாசிப்பதையே நான் எனது முறையியலாகக் கொண்டிருக்கிறேன். பனுவலின் மூலமாக அதை எழுதியவரின் மனதிற்குள் ஊடுறுவுவது. ஒரு விதமான கூடு விட்டு கூடு பாயும் தந்திரம் இது. ஊர்களில் சாமியாடுபவர்கள் இதைத் தன்னுணர்வின்றி செய்து கொண்டிருக்கிறார்கள். கொஞ்ச நேரத்திற்கு தங்கள் உடலை சாமி வந்து இறங்குவதற்கு வசதியாய் விட்டு விலகி நிற்பது. நாடகக்காரர்களும் இதையே கொஞ்சம் போல மாற்றி, தத்தம் உடலை கதாபாத்திரங்களுக்காக விட்டுத் தருகிறார்கள். எந்தவொரு பனுவலை வாசிக்கும் போதும் நானும் இதையே தான் செய்ய விரும்புகிறேன். நேற்று முழுவதும், அயோத்திதாசர் எப்படிப்பட்ட மனிதராக இருந்திருப்பார் என்று கற்பனை செய்வதிலேயே எங்கள் பொழுது கழிந்தது. * விஜய் தொலைக்காட்சியில் வந்திருந்த இளையராஜா பேட்டியை இணையத்தில் தேடி இன்று பார்த்தேன். சென்னை வருவதற்கு முன்பான தனது வாழ்க்கையைப் பற்றி அவர் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்க பதட்டமாகவே இருந்தது. எப்பொழுது வேண்டுமானாலும் உடைந்து சிதற, ததும்பிக் காத்து நிற்கும் குமிழி போல இருந்தார் இளையராஜா. மாயாண்டி பாரதியுடன் அவருக்கு ஏற்பட்ட மதுரை அனுபவத்தை விவரித்தது அப்படியொரு உடைந்த தருணம். ‘கட்சியில் கேட்க வேண்டும்' என்பது நேர்மையாய் சொல்லப்பட்ட பதில் தான் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. ஆனால், அந்தப் பதில் இளையராஜா சகோதரர்களால் எத்தனை வலி நிரம்பியதாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது! ஒடுக்கப்பட்ட அத்தனை பேரும் இந்த உள்ளுணர்வினாலேயே செய்யப்பட்டிருக்கிறார்கள். எந்தத் திசையிலிருந்து, எந்த வடிவத்தில் புறக்கணிப்புகளும், மறுதலிப்புகளும் வரும் என்று அறிந்திராத திகைப்பு அது. தீண்டாமையை வித விதமான வடிவங்களில் சந்தித்ததனால் உண்டான இவ்வகைச் சுதாரிப்பு ஒடுக்கப்பட்ட அனைவருக்குள்ளும் சேகரமாகியிருக்கிறது. புன்னகையும், அரவணைப்பும் கூட உதாசீனத்தின் வடிவங்களாக இருக்குமோ என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது. ஒடுக்கப்பட்டவர்களின் survival instinct இது. மேலும் மேலுமான அவமானங்களிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக இந்த உள்ளுணர்வை அவர்கள் தொடர்ந்து வளர்த்துக் கொள்கிறார்கள். இது ஒரு வகையில் அனைத்தையும் சந்தேகப்படும் குணம். ‘அனைத்தையும் சந்தேகப்படுதல்' தத்துவார்த்த உரையாடலில் வேண்டுமானால் உன்னத நிலையாக இருக்க முடியும். ஆனால், அன்றாட வாழ்க்கையில் அது கொடூரம். எது நட்பு, எது பகை என்று அறிய முடியாத சகதி. ஆனாலும், இந்த உள்ளுணர்விலிருந்து வெளி வருவதற்கே ஒவ்வொரு ஒடுக்கப்பட்டவனும் ஆசைப்படுகிறான். இதற்கு அவன் முன்பு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று, அவன் உங்களைப் போலத் தன்னையும் மாற்றிக்கொள்ளுதல். இந்த வழிமுறையின் இருபதாம் நூற்றாண்டு வடிவம் தான் ‘தலித் அரசியல்’. உங்களுக்கு சரிசமமாக தன்னையும் உயர்த்திக் கொள்வது தான் இதன் அடிப்படை நோக்கம். ஆனால், பாருங்கள், நீங்களொன்றும் அவ்வளவு உன்னதமான வாழ்க்கை வாழவில்லை என்பதால், உங்களைப் போலவே மாறுவது கூட அவனைச் சகதியிலிருந்து வெளியேற்றவில்லை. இதன் அடுத்த வழிமுறை, தன்னை விடுவித்துக் கொள்வதோடு உங்களையும் அத்தனை கசடுகளிலிருந்தும் விடுவித்தல். இதற்காக அவன் தன்னை பொதுத் தளத்தில் இருத்திக் கொண்டு உங்களோடு உரையாடத் தொடங்குகிறான். இது அயோத்திதாசருக்கு ‘தமிழ் பெளத்தமாக’ இருந்தது; இளையராஜாவிற்கு ‘திரையிசையாக' இருக்கிறது. ‘சாதி பேதங்களற்ற இசை’ என்பது தானே அவருடைய மொத்த செய்தியும். நீ என்னை வைகை அணையின் சுவர்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் குழந்தைத் தொழிலாளியாக அனுப்பினாலும், கருணை கொண்டு உன் அலுவலகத்தின் ஆபிஸ் பாயாக பதவி உயர்த்தினாலும், சென்னை பற்றிய பயத்தோடு மதுரை கம்யுனிஸ்ட் கட்சியில் அடைக்கலம் புகுந்தால் ‘கட்சியில் கேட்க வேண்டும்' என்று தூய்மைவாதம் பேசினாலும், இன்னும் இப்படியே மனதிற்குள் புதைந்து கிடக்கும் ஆயிரமாயிரம் அனுபவங்கள் இருந்தாலும்…. பதிலுக்கு நான் ‘சாதி பேதங்களற்ற இசை’யை மட்டுமே தானே உனக்குத் தந்தேன். ஆனால், இந்தப் பெருந்தன்மைக்கு நாம் செய்த மரியாதை என்ன? அவரைக் கடவுள் என்றது. எவ்வளவு பெரிய அராஜகம் இது! ‘நீ என்னை அவமானப்படுத்தினாய், ஆனால் நான் உனக்கு இசையை வழங்கினேன்’, என்று ஒருவர் சொன்னால், ‘அய்யயோ, நீங்களெல்லாம் கடவுளாக்கும்!’ என்று சொல்வது எவ்வளவு பெரிய அரசியல்? திருந்தவே மாட்டோமா நாம்?

gowthama sannah said… நிச்சயம் திருந்த மாட்டோம்.. எங்களை திருந்து என்று சொல்ல உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. எங்களுக்கு எந்த திறமை இல்லாவிட்டாலும் திருந்தக்கூடாது என்கிற தகுதியும், கேள்விக்கு அப்பாற்பட்ட தகுதியும் இருக்கிறது. எங்களைத் தவிர தூய்மைவாதம் பேசுவதற்கு தகுதியான ஆள் யார் இருக்கிறார்கள், தீட்டு, ஆச்சாரம் மட்டுமே ஒரு வாழ்க்கைமுறையாக இருக்கும் எங்களைப் பார்த்து இப்படி கேட்பதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது.. இப்படி ஒரு மனஓட்டம் இருக்கின்ற சமூகத்தில் இளையராசா நன்றியோடு நினைக்கப்படுவார் என்பது அவரது ரசிகர்களை தாண்டி சாத்தியமில்லை. அவரது இசை வெள்ளத்தில் நீந்திக்கொண்டிருப்பவர்களைப் பார்த்தால் ஓரளவிற்கு சுதந்திரமானவர்களாக இருப்பவர்களை பார்த்திருக்கிறேன். ஆனால் அவருக்கு இணையாக மற்றொருவரை முன்னிருத்தும் எல்லோரையும் பாருங்கள்.. நிச்சயம் திருந்தமாட்டார்கள். அவர்கள் கடவுள் மறுப்பாளர்களாக இருந்தாலும் அன்புடன் சன்னா 17 January 2016 at 15:21 Unknown said… ‘கட்சியில் கேட்க வேண்டும்' என்பது நேர்மையாய் சொல்லப்பட்ட பதில்-என்னவொரு முரண், சொத்து தனிப்பட்டது கட்சி சார்பானது அல்ல, கேட்பவர் கட்சிக்காக உழைத்தவர், உழைப்பவர், உழைக்கப்போவவர், இல்லாதவர், கேட்பது இல்லாதவனுக்கே எல்லாம் என்று பொது உடமை பேசும் பெரியவர்களிடம் கட்சியில் கேட்கவேண்டும் என்று கூறுவது ஒரு சாக்கு, ஒன்று இவன் நாம் வீட்டில் நமக்கு சமமாகவா என்ற எண்ணமாக இருக்கலாம், அல்ல கட்சி வேலை செய்பவன் தனக்கு எப்படி வாடகை கொடுப்பான் என்ற எண்ணமாக இருக்கலாம் ஆக உழைப்பை உருஞ்சும் நவீன அட்டைகள் இந்த தோழர்கள் என்பதை உலகிற்கு உணர்த்தி உள்ளார். 17 January 2016 at 17:20 Unknown said… மாற்றுவடிவம் தேடுகிற நபர்களை நாம் அங்கீகரிக்காமல் புறந்தள்ளுவதற்கு சமம் கடவுள் என அழைப்பது. கடவுளை பயன்படுத்தி தானே பாகுபடுத்தினர் சமூகத்தினார்கள் என்பதை நினைவிற்கொள்ள வேண்டியுள்ளது. இளையராஜா அவர்களும் அடித்தட்டு சமூகத்திற்கு அப்பால் இருப்பதும் ஏனோ? மேலேகண்ட மரியாதைக்குரிய சன்னா அவர்கள் விமர்சனம் யாருக்கானதோ? போகிறபோக்கில் முன்மொழிந்துள்ளார். ஜெர்மன் சென்றாலும் வாசகர்களை நலன்கருதி எழுதுகிற பேராசிரியருக்கு நன்றி. 17 January 2016 at 17:23 raghupathiv said… அந்த சொத்து, தங்க கேட்ட இடம்,ஐ மா பா, கட்சிக்கு கொடுத்திருந்தாலும், குடும்ப பிரச்சினை, வழக்கு காரணமாக,( கட்சிக்கு, குடும்ப சொத்தை தந்ததை மற்றவர்கள் ஏற்காததால்) ஐ மா பா வால், கட்சியை கேட்க வேண்டும் என்ற பதிலையே தர இயன்றது. கட்சியை கேட்க வேண்டும் என்ற பதில் நேர்மையானது என்பதில் எவருக்கும் மாற்றுக கருத்து கிடையாது. நமக்கு சமமாகவே? வாடகை தர இயலுமா என்ற கேள்விகள் என்றோ நடந்து முடிந்த ஒன்றுக்கு உள்நோக்கம் கற்பிப்பதாகவே காணப்படும். 18 January 2016 at 09:43 enRenRum-anbudan.BALA said… அருமையான கட்டுரை, ஆழமான கருத்துகள், பகிர்வுக்கு நன்றி

Recent Posts

See All

தேவேந்திரத் தன்னிலை...

மாற்று வரலாற்றுவரைவியலில் கடந்தகால சம்பவங்களை அல்லது நிகழ்வுகளைக் கற்பனை செய்வதில் சில சிக்கல்கள் உள்ளன. உதாரணமாய், பூர்வ பெளத்தர்களை...

Comments


bottom of page