top of page

ஆசான்களும் பேராசிரியர்களும்



1. ஜெயமோகனுக்குக் களநிலவரம் தெரியவில்லை. ஒரு காலகட்டத்திற்குப் பின் அவர் சுயமாக வாழ்வதை நிறுத்திக் கொண்டாரோ என்பது என் சந்தேகம். சூழல் பற்றியும் வாழ்க்கை பற்றியும் அவர் வெளியிடும் கருத்துகள் அனைத்தும் அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்லும் தகவல்களிலிருந்து உருவாக்கப்படுபவை என்றே நான் நினைக்கிறேன். இந்த நேரத்தில் அவருக்கு நான் சொல்லக்கூடிய ஒரே ஒரு ஆலோசனை இதுதான்: நிகழ்கால வாழ்க்கை பற்றிய அக்கறையின்மை தனக்கு எங்கிருந்து ஆரம்பித்தது என்பதை அவர் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்!


இலக்கியவாதிகள் அதிகார மையங்களாக உருவாகுவது குறித்து நீண்ட விளக்கமொன்றை ஜெயமோகன் அளித்திருக்கிறார். (https://www.jeyamohan.in/181046/) அதன், சாராம்சத்தை சுருக்கமாகச் சொல்கிறேன். ‘இலக்கியவாதிகளின் அதிகாரம் என்ற குற்றச்சாட்டை பேராசிரியர்களே முன்வைக்கிறார்கள். அவர்களுக்கும் இலக்கியத்திற்கும் என்ன சம்பந்தம்? சம்பந்தமில்லாத விஷயங்களில் அவர்கள் ஏன் தலையிட வேண்டும்? இலக்கியவாதிகள் உண்மையிலேயே அதிகார மையங்களாக மாறுகிறோம் என்றால், அதை இலக்கியவாதிகள் கேட்கட்டும். இதைக் கேட்கும் அருகதை பேராசிரியர்களுக்கு இல்லை.’


இந்த வாதத்தின் அபத்தம், படிக்கிற கணத்திலேயே உங்களுக்கு விளங்கியிருக்கும். இலக்கியவாதிகளும் பேராசிரியர்களும் வேறு வேறு நாட்டில் வாழ்ந்து கொண்டிருப்பது போலவும், உள்நாட்டுப் பிரச்சினையில் அந்நியர்கள் தலையிடுவது போலவும் பேசுவதைப் பார்த்தால், அவர் நிதானத்தில் இல்லை என்றும் விளங்கியிருக்கும். பல விவாதங்களில் அவர் அப்படித்தான். நிதானத்தில் இருப்பதில்லை.


கோணங்கி பாலியல் விவகாரத்தில் தொடங்கப்பட்ட இவ்விவாதத்தில் ஜெயமோகன் இப்படியொரு கருத்தை அள்ளித் தெளித்திருப்பது குறித்து எனக்கு பெரிய ஆச்சரியம் எதுவுமில்லை. ஏனெனில், நான் ஏற்கனவே சொன்னது போல, ஜெயமோகனுக்குக் களநிலவரம் சரிவரத் தெரியாது. நேரடியான அனுபவங்கள் எதுவுமற்ற நிலைக்கு அவர் தன்னை உட்படுத்திக் கொண்டார்.


2. ’இலக்கியவாதிகள் – பேராசிரியர்கள்’ முரண் ஒரு ஆகக் கழிசடையான, பழைய முரண். அவரே குறிப்பிடுவது போல சி.சு. செல்லப்பா, கா.நா.சு. காலத்துப் பேச்சு. அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி, அப்படியொரு வகைமாதிரி இலக்கியவாதி பாத்திரமோ, பேராசிரியப் பாத்திரமோ தமிழ்நாட்டில் இல்லை.


இலக்கியவாதிகள் அத்தனை பேரும் நுண்ணுணர்வுடன் வளைய வந்ததாகவும், பேராசிரியர்கள் கழனிப்பானை போல இருந்ததாகவும் நமக்குத் தகவல்கள் இல்லை. ஆனால், அந்நாளைய சில பேராசிரியர்கள், இன்றைக்கு சில இலக்கியவாதிகள் செய்வதைப் போலவே, அதிகார மையங்களாக செயல்பட்டனர் என்பது மட்டும் உண்மை. ஆனால், அந்தக் காலம் மலையேறிவிட்டதை ஜெயமோகனுக்கு யாரும் சொல்லவில்லை என்று நினைக்கிறேன்.


என் அனுபவமொன்றை உங்களுக்குச் சொல்கிறேன். வருட இறுதியில், வகுப்புகள் நடைபெற்ற விதம் குறித்து மாணவர்களிடம் கருத்து கேட்பது வழக்கம். அப்படிக் கேட்டபோது ஒரு மாணவர் இப்படிச் சொன்னார்: ‘எல்லா விவாதத்திலும் நீங்கள் சொல்வதுதான் சரி என்றே சொல்வீர்கள், சார். எங்கள் தரப்பை நீங்கள் என்றைக்குமே ஒத்துக் கொண்டது இல்லை.’


இது ஒரு குற்றச்சாட்டு. கேட்ட மாத்திரத்தில் என்னை ஒரு சர்வாதிகாரியாக நீங்கள் கற்பனை செய்துவிட முடியும்.


ஆனால், அந்த மாணவருக்கு நான் பதில் சொன்னேன்: ‘நான் சொல்வதை, நானே சரி என்று சொல்லாவிட்டால், வேறு யார்தான் சொல்வார்?’


கேள்வி கேட்ட மாணவர் ஒரு கணம் திகைத்துப் போனார்.


நான் மீண்டும் அவரிடம் இப்படிக் கேட்டேன்: ‘நான் ஏன், நீங்கள் சொல்வதைச் சரி என்று சொல்ல வேண்டும்?’


‘சரியாக இருந்தால், சரி என்று சொல்லலாமே!’


‘சரியாக இருப்பதைத்தான், நானே சொல்கிறேனே!’


‘நாங்கள் எப்பொழுதுமே சரியானதைச் சொல்ல முடியாதா?’


‘முடியும்.’


‘அப்ப, அதை நீங்கள் அங்கீகரிக்கலாமே! இந்த ஒரு வருடத்தில் நாங்கள் எதையுமே சரியாகச் சொல்லவில்லையா?’


‘விஷயம் அது அல்ல. நீங்கள் சரியென்று நினைப்பதை, ஒரு பேராசிரியர் அங்கீகரிக்க வேண்டுமென்று நினைக்கிறீர்களே, அதுதான் தவறு. வகுப்பறைகளில் நாம் நடத்துவது உபந்நியாசம் அல்ல; உரையாடல். விவாதம். நீங்கள் சரியென்று நினைப்பதை யாருடைய அங்கீகாரத்திற்கும் காத்திராமல் சொல்லப் பழக வேண்டும். மிகைல் பக்தீனின் dialogism போல.’


‘நீங்கள் ஒரு பேராசிரியர், நாங்கள் மாணவர்கள். இருவரும் எப்படிச் சமமாவோம்? என்ன இருந்தாலும் நீங்கள் சொல்வது ஒரு பேராசிரியரின் கருத்து இல்லையா? சொல்வதற்கு முன்பே, நீங்கள் சொல்லும் எல்லாமும் ‘சரி’ என்று தானே கருதப்படும்?’


‘ஒரு பேராசிரியரையும் மாணவரையும் அறிவே வேறுபடுத்துகிறது என்றால், அது எப்படிக் கற்கும் முறையாக இருக்க முடியும்? அதிலும் குறிப்பாக சமூக அறிவியல்களைக் கற்கும்போது, பேராசிரியர் நிச்சயமாக ஆசான் இல்லை; ஆசான் என்பது அதிகாரத்தின் அடையாளம். நானும் நீங்களும் இந்தச் சமூகம் பற்றிய அறியாமையாலேயே பிணைக்கப்பட்டிருக்கிறோம். ஒவ்வொரு பேராசிரியரும் அந்த வகையில், ஓர் அறியா ஆசான்.’


அதன்பின் அந்த வகுப்பறை, ஜாக் ரான்சியரின் The Ignorant Schoolmaster நோக்கித் திரும்பியது.


நான் ஜெயமோகனுக்கு வழங்கும் யோசனையும் இதுதான். ஆசானாக அல்ல; அறியா ஆசானாக இருக்க முயற்சிக்கலாம். அதற்கு முதலில் அரியாசனத்திலிருந்து இறங்கி வரவேண்டும்!


3. இன்றைக்கு இலக்கியம் நோக்கியும், கலை வடிவங்கள் நோக்கியும் வரும் இளைஞர்களில் பெரும்பாலோர் கல்லூரிப் பேராசிரியர்களால் ஆற்றுப்படுத்தப்பட்டவர்கள். நவீனத் தமிழ் இலக்கியத்தின் முக்கியமான பகுதிகளை வகுப்பறைகளில் அறிமுகப்படுத்தும் பேராசிரியர்கள் இன்று எண்ணிக்கையில் அதிகம். அதே போல, நாட்டுப்புறவியல், நாடகவியல் போன்ற ஆய்வுத்துறைகளே ஏராளமான மாணவர்களை இலக்கியத்தின் பக்கமும் இழுத்து வருகிறது. ஜெயமோகன் உள்ளிட்ட சம கால எழுத்தாளர்களின் படைப்புகளை ஆய்விற்காக எடுத்துக் கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கு இந்தப் பேராசிரியர்களே முக்கியக் காரணம்.


இந்தப் பேராசிரியர்கள், ஜெயமோகன் குற்றம்சாட்டுவது போல கல்வி நிறுவன அதிகார வளையத்தில் உள்ளவர்கள் அல்ல. தங்களது நிறுவனத் தலைமை காட்டும் புறக்கணிப்பின் வலியை மறைத்துக் கொண்டே இவர்கள் இந்த வேலையைச் செய்து வருகிறார்கள். கொஞ்ச காலத்திற்கு முன்னால், அதாவது ஜெயமோகன் தன்னுணர்வோடு இருந்த காலங்களில், சொற்பமான எண்ணிக்கையில் இருந்த இவ்வகைப் பேராசிரியர்கள் இன்றைக்கு கணிசமாகப் பெருகியிருக்கிறார்கள்.


ஏறக்குறைய, ஒரு புது வகைப் பேராசிரிய வருகையைக் கல்வி நிறுவனங்கள் எதிர்கொண்டு வருகின்றன என்றே சொல்லவேண்டும். இந்தப் பேராசிரியர்களே, இலக்கியவாதிகள் அதிகார மையங்களாக மாறுவதைக் கண்டு எச்சரிக்கிறார்கள். கண்டனம் தெரிவிக்கிறார்கள். விமர்சிக்கிறார்கள். ஏனெனில், இவ்வகை இலக்கிய அதிகார பீடங்களால் வன்கொடுமைக்கு உள்ளாவது, இப்பேராசிரியர்களின் மாணவர்களே என்பதைக் கவனிக்க வேண்டும்.

மணல்மகுடி நாடகக் குழுவிற்கு அலையலையாய் வந்து சேர்ந்த இளம் நடிகர்கள், கல்வி நிறுவனங்களிலிருந்தே தங்கள் பயணத்தை ஆரம்பித்தார்கள். பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி, மதுரை அமெரிக்கன் கல்லூரி, கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரி, திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரி, கோவை பிஎஸ்ஜி கல்லூரி, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், நெல்லை மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம் என்று என்னால் பட்டியலிட முடியும்.


4. மு. வ. போன்று இலக்கியத்தை அதிகாரமாக மாற்றிய பேராசிரியர்கள் இன்றைக்கு யாரும் இல்லை. இன்றைய பேராசிரியர்களில் சரி பாதி பேருக்காவது இலக்கியம் என்றால் என்ன என்று தெரியும். உலக இலக்கியங்களின் அறிமுகமும் அவர்களுக்கு உண்டு. அதனால், நவீனத்தமிழ் இலக்கியத்தின் பலமும் தெரியும், பலவீனமும் தெரியும்.


அதே போல, நா.வ. போன்றோர் நாட்டார் வழக்காறுகளின் மீது அக்கறை காட்டியபோது, அதுவெல்லாம் ‘வாழைப்பழத்தை விளக்கெண்ணையில் முக்கி எழுதப்படும் எழுத்து’ என்று எழுதிய வெங்கட் சாமிநாதன் போன்ற ‘நுண்ணுணர்வு’ மிக்க இலக்கியவாதிகளும் இன்றைக்கு இல்லை. அன்றும் சரி, இன்றும் சரி, ‘இலக்கியவாதிகள் அத்தனை பேரும் மேன்மையானவர்கள், பேராசிரியர்கள் அத்தனை பேரும் கழிசடைகள்!’ என்று நிதானமாக யோசிக்கும் யாரும் சொல்லக் கூசுவார்கள்.


5. ஆனால், இன்றைய தமிழிலக்கியச் சூழல் கவலை தரக்கூடியது. விஷ்ணுபுரம், தேசாந்திரி, ஜீரோ டிகிரி, மணல்மகுடி என ஒவ்வொன்றும் ஒவ்வொரு அதிகார மையம். இதன் விளைவே கோணங்கி விவகாரமும். இப்பொழுதாவது இந்த மையங்கள் தங்களைப் பரிசீலினைக்கு உட்படுத்தலாம் என்பதே என் போன்ற பலரின் விண்ணப்பமும். இதையெல்லாம் விட்டுவிட்டு, ‘இவர்கள் இலக்கியவாதிகள் இல்லை; நுண்ணுணர்வு அற்றவர்கள்; தரத்தில் ஒரு புள்ளி குறைவானவர்கள்’என்று ஜல்லியடிப்பதால் என்ன நடந்துவிடும்? இலக்கியவாதிகளைக் கேள்வி கேட்க இலக்கியவாதியாக இருக்க வேண்டும் என்று சொன்னால், அந்தச் சாதிச்சான்றிதழை எந்த மடத்தில் வாங்க வேண்டும் என்பதையும் சொல்லிவிடலாம். இந்த நாட்டாமைத்தனத்தைதான் நாங்கள் கேள்வி கேட்கிறோம்.


அப்புறம், தமிழ் இலக்கியவாதிகள் மத்தியில் ஒரு வழக்காறு உண்டு. யாராவது ஒருவரைப் புகழ வேண்டுமென்றால், ‘ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டியதை தனியொருவராக செய்து வருபவர்’என்று ஜால்ரா தட்டுவது இலக்கிய மரபு. இதைக் கேட்கும் பொழுதெல்லாம் எனக்கு ஒன்றே ஒன்றுதான் தோன்றும்; ‘இந்த இலக்கியவாதிகளுக்கு, இலக்கியம்தான் தெரியாது; பல்கலைக்கழகமும் தெரியாதா?’





Comentários


bottom of page