top of page

காட்டு விலங்கும் வீட்டுப்பிராணியும்

Updated: Sep 26, 2023




ஆண்டிப்பட்டி கணவாய் அருகே மேக்கிழார்பட்டி என்றொரு கிராமம் இருக்கிறது. அந்தக் கிராமத்தில்தான் பழனியப்பன் வாழ்ந்து வருகிறார். விவசாயி. அவரிடம் ‘மலைமாடுகள்’ இருக்கின்றன என்று கேள்விப்பட்டு அவரைச் சந்திக்கப் போயிருந்தேன். நாட்டுமாடு பார்த்திருக்கிறோம், அது என்ன மலைமாடு என்பது என் ஆச்சரியம்.


மலையடிவாரத்தில் இருந்தது அவரது தோட்டம். அதனுள் ஒரு வீடு. ஊருக்குள் இன்னொரு வீடு இருக்கிறது என்றாலும், அவர் மட்டும் தோட்ட வீட்டிலேயே வசித்து வருகிறார். அவரது குடும்பத்தினர் பகலில் தோட்டத்தில் வேலை செய்துவிட்டு, இரவில் ஊருக்குள் போய் விடுகிறார்கள். அவர் மட்டும் இரவிலும் அந்தத் தோட்ட வீட்டிலேயே தங்கி விடுகிறார்.


அவருக்கு எழுபது வயது இருக்கலாம். ஒடிசலான தோற்றம். ஆடையென்றால், வேட்டி மட்டும்தான். மேலே சட்டை அணிகிற பழக்கம் இல்லை. எங்கேயாவது வெளியூர் சென்றால் மட்டும் சட்டை அணிவாராம். ‘இப்பெல்லாம் வெளியூர் போகிறதில்லங்க. நினைச்சா பழனிக்கு மட்டும் போறது’ என்கிறார் பழனியப்பன்.


அவரது தோட்டம் இருக்கிற அடிவார மலைக்கு ‘சந்தைமலை’ என்று பெயர். சந்தைமலை, ஆண்டிப்பட்டி மலைத்தொடரின் ஒரு சிறு பகுதி. ‘ரொம்ப காலத்துக்கு முன்ன, அந்த மலைப்பக்கம் சந்தை கூடும்னு சொல்வாங்க. அதனால தான் சந்தைமலைனு பேராம்’.


அவரிடம் ஐம்பது மாடுகள் வரை இருக்கின்றன. அதற்கென்று தனியாக தொழுவமும் வைத்திருக்கிறார். நான் போயிருந்த பொழுது, இரண்டு உழவு மாடுகள் மட்டும் அப்புராணியாய் நின்று கொண்டிருந்தன. ‘மத்த மாடுகளெல்லாம் மலைக்கு போயிருக்கு’, என்று சொல்லி சந்தைமலையைக் காட்டினார்.


‘மலைக்கா?’


‘ஆமா, காலையில போயிரும். மேஞ்சிட்டு, நினைச்சா சாயங்காலம் வரும். இல்லன்னா அங்கயே தங்கிரும்.’


‘அங்கயே தங்கிருமா?’


‘தங்கிரும். பத்து, பதினைஞ்சு நாள் கூட வராது இருக்கும்.’


‘எல்லாம் உங்க மாடு தானா?’ சந்தேகத்தோடு கேட்டேன்.


‘நம்ம மாடுக தாங்க’ என்றார் பழனியப்பன். ‘அங்கயே மேஞ்சிட்டு, அங்கயே இருக்கும். இப்ப மலையில கொஞ்சம் தண்ணி இருக்கு. அதனால பெரும்பாலும் வராதுக. தண்ணி இல்லன்னா எல்லாம் வந்துரும். நேத்தெல்லாம் அஞ்சு, பத்து மாடுகதான் வந்துச்சி. இன்னைக்கும் அதுகதான் வரும். மத்ததெல்லாம் காட்டுக்குள்ளயே தங்கிரும்’.


‘சாயங்காலமானா அந்த மாடுகளப் பார்க்கலாமா?’


‘சொல்ல முடியாது. நீங்கெல்லாம் வேற வந்திருக்கீக… புது ஆட்கள் இருக்குறது தெரிஞ்சா வராது. அப்படியே திரும்பிப் போயிரும்.’


எனக்கு இன்னொரு சந்தேகம் வந்தது. அவர் ஒரு வேளை காட்டெருமைகளை சொல்கிறாரோ? ஆனால், ஆண்டிப்பட்டி மலைத் தொடரில் காட்டெருமைகளும் கிடையாது. அப்படியானால் அவர் எந்த மாடுகளைச் சொல்கிறார்?


‘நம்ம நாட்டு மாடுகதான். ஆனா, மலையிலயே வளர்ரதுனால, மனுச வாடை கண்டா வராது. என் ஒருத்தனுக்குதான் கட்டுப்படும். வேற யாரும் பக்கத்துல போக முடியாது.’


‘எல்லாம் காளை மாடுகளா?’


‘இல்ல. அதிகம் பசு மாடுகதான். ஒண்ணே ஒண்ணு தான் பூச்சிக்காள. மத்தபடி, காளைக்கன்னுக சில உண்டு. பெரும்பாலும் பசு மாடுதான்.’


‘பசு கூட முரட்டுத்தனமா இருக்குமா?’


‘மலையிலயே வளருதுகள்ல. ரொம்ப மூர்க்கமா இருக்கும். அசந்தா, தூக்கி வீசிரும்’. பயமுறுத்தினார் பழனியப்பன். குட்டிகளுக்கு ஆபத்து என்றால் மட்டுமே மூர்க்கமடையும் என்று கேள்விப்பட்டிருந்த பசுக்கள் (தாய்ப்பாசம்), சும்மாவே மூர்க்கமானவை என்பதைக் கற்பனை செய்ய முடியவில்லை.


*


பழனியப்பனின் மலைமாடுகள் சுத்துப்பட்டிகளில் மிகவும் பிரபலம். ஜல்லிக்கட்டுக் காளை வளர்க்க விரும்புகிறவர்கள் இவரிடமிருந்து கன்றுகளை வாங்க பிரியப்படுவார்கள். அவருடைய மாடுகள் அவ்வளவு மூர்க்கம்! ஆனால், அவர் சொல்வதைப் பார்த்தால் அவரது பசுமாடுகளைக் கூட ஜல்லிக்கட்டுக்கு பயன்படுத்தலாம் போல!


பழனியப்பன் அதிகம் படித்தவரில்லை. ஆனால், வள்ளலார் பாடல்களை மனப்பாடமாய் சொல்லிக் காட்டினார். மேக்கிழார்பட்டியிலிருந்த சாமியார் ஒருவர் சொல்லிக் கொடுத்தாராம். மற்றபடி அவரது ஒட்டுமொத்த வாழ்க்கையும் விவசாயம், விவசாயம்தான். இப்படி சாமியார்கள் சொல்லித் தந்ததாய் செய்யுள்களைப் பாடிக் காட்டும் வயதான பெரியவர்களை கிராமப்புறங்களில் சர்வ சாதாரணமாகப் பார்க்க முடியும்.


பழனியப்பனுக்கு நினைவு தெரிந்து அவரது தாத்தாதான் மலைமாடுகளை வளர்த்து வந்தாராம். பழனியப்பனின் அப்பாவிற்கு ஏனோ மலைமாடுகளுடன் பழகப் பிடிக்கவில்லை. ஆனால், பழனியப்பனோ அவரது தாத்தா மாதிரி. சிறுவயதிலேயே மலைமாடுகளுடன் பழகிக் கொண்டார். இதோ அவருக்கும் எழுபது வயது ஆகிறது. இன்னமும் அவரது மகன்களோ பேரன்களோ அந்த மாடுகளுடன் ஒட்டவில்லை.


நான் பழனியப்பனுடன் பேசிக்கொண்டிருந்த பொழுது அவரது மகன்களில் ஒருவரும் அங்கேயேதான் இருந்தார்.


‘இவனைத் தான் பழகிக்கோனு சொல்றேன். அந்தா, அந்தாங்குறான். காரியத்தக் காணோம்’.

இதைக் கேட்டு, அந்த மகன் ஒரு அசட்டு சிரிப்பு சிரித்தார். அவருக்கு நாற்பது வயது இருக்கும்.

‘கொஞ்சம் கொஞ்சமா இப்பதான் பழகுறேன். ஆனாலும், அப்பா மாதிரி முடியாது’.


பழனியப்பன் முதற்கொண்டு, ஏன் எந்த மகன்களும் அப்பா மாதிரி இல்லை?


ஐம்பது மாடுகள் வரை வைத்திருப்பதாகச் சொல்கிறார். ஆனால், அத்தனையும் மலையில்தான் வசிக்கின்றன. விருப்பப்பட்டால் அல்லது தேவைப்பட்டால் இரவுகளில் மட்டும் தொழுவத்தில் வந்து தங்கிக் கொள்கின்றன. பெரும்பாலும், மலைதான் குடியிருப்பு. மனுசவாடையே அதுகளுக்கு ஆகாது என்று வேறு சொல்கிறார். அப்படியானால், அந்த மாடுகளை எல்லாம் யார் பாதுகாக்கிறார்கள்? என்ன கணக்கு இது? மலைகளிலேயே திரிந்து கொண்டிருக்கும் முரட்டு மாடுகள் என்றால், அவற்றை ‘தன்னுடைய மாடுகள்’ என்று அவர் எப்படி சொல்லிக் கொள்ள முடிகிறது?


‘பூச்சிமாடு தான் அதுகளுக்கு தலைமை மாதிரி. ஒரு கூட்டமா தான் இருக்குங்க. பூச்சிமாடு எல்லாத்தையும் கவனமா பாத்துக்கும். பச்சிளங்கன்றுகள் என்றால் மலைக்கு கூட்டிட்டுப் போகாது. அந்தக் கன்றுகள்லாம் தொழுவத்துல தான் நிக்கும். கொஞ்சம் பயிறு பச்சைய கடிக்கிற வரைக்கும் தொழுவம் தான் அதுகளுக்கு. அப்புறமா அதுகளும் மலைக்கு ஏறிடும்.


‘காளைக் கன்றுகளை சீக்கிரமே வித்திருவோம். யார்னாலும் வந்து உழவுக்கு, வண்டிக்குன்னு சிறுசிலயே வாங்கிட்டு போயிருவாங்க. அவுங்களும் பழக்கனும்ல. சூட்டிகையான கன்றுகன்னா ஜல்லிக்கட்டுக்கு பழக்க கொண்டு போவாங்க.


‘வளர்ந்த காளைனா பூச்சிக்காளை மட்டும் தான். இன்னொரு காளை இருந்தா போட்டியாகிப் போயிரும். அதனால, ஒரே ஒரு பூச்சிக்காளையதான் விடுவோம். பூச்சிக்காளைக்கு வயசாகுதுனா புதுசா இன்னொரு பூச்சிக்காளைய தயார் பண்ணிருவோம்.


‘பசுவ மட்டும் விக்க மாட்டோம். பசு, இன விருத்திக்கு தேவை. அதனால அத விக்கிறது இல்ல. சிலர் கோவிலுக்குன்னு வந்து கேப்பாங்க. அப்ப மட்டும் பசு மாட்ட விப்போம். அதே மாதிரி, பாலக் கறந்து விக்கிறதும் இல்ல. வீட்டு தேவைக்கு மட்டும் கறந்துக்குறது. மத்தபடி பால் கன்றுகளுக்குத்தான்.


‘பசு பயிராயிருச்சுன்னா தெரிஞ்சிரும். சில பசு ஈனுறதுக்காக தொழுவத்துக்கு வந்துரும். இங்கயே கிடக்கும். ஈனி, ஒரு வாரம் வரைக்கும் இங்க நிக்கும். அப்புறம் குட்டிய விட்டுட்டு மலைக்கு போயிரும். பால் குடுக்க மட்டும் சரியா வந்து நிக்கும். குட்டி வளர்ந்ததும் அதையும் கூட்டிட்டு மலைக்கு போயிரும். அந்த நேரத்துலெல்லாம் நான் கூட பக்கத்துல போக முடியாது’.


பழனியப்பன் கதை கதையாய் சொல்லிக் கொண்டிருந்தார். அவர் மாடுகளைப் பற்றித் தான் சொல்கிறாரா அல்லது வேறு ஏதேனும் காட்டு விலங்கைப் பற்றி சொல்கிறாரா என்று இருந்தது எனக்கு.


‘சில பசு இருக்கு. அதுக ஈனுறதுக்குக் கூட இங்க வராது. மலையிலயே ஈனிறும். ஈனினதோட நிக்காம, அந்தக் குட்டிய அங்கயே ஏதாவது புதர்ல மறைச்சு வச்சுட்டு தொழுவத்துக்கு வந்து போகும். அதோட வயித்த பாத்து தான் ஈனிறுச்சினு தெரிஞ்சுக்கனும்.


‘ஒரு வாரம் பத்து நாள் போல புது குட்டிய மலையிலயே ஒளிச்சு வச்சிருக்கும். யாராலயும் கண்டுபிடிக்க முடியாது. ஒரு தரம் நான் கூட அப்படியொரு பசு பின்னாடியே போய் எங்க தான் ஒளிச்சு வைக்குதுனு பாக்கப் போனேன். அது, ஒரு இடத்துல போய் நிக்கிது. நான் அதுக்கு தெரியாம ஒளிஞ்சி நிக்கேன். யாராவது நிக்காங்களானு சுத்திமுத்தி பாக்குது. குட்டி எங்க இருக்கும்னு எனக்கு சுத்தமா தெரியல. அப்ப திடீர்னு அந்தப் பசு ஒரு புதர் கிட்ட போயி ஃப்ப்ப்ர்ர்ர்…ருனு சத்தம் கொடுக்கு. குட்டி வெளிய வருதே!’


ஒரு திகில் படக் கதையைக் கேட்டுக் கொண்டிருப்பது போல அதை நான் கேட்டுக் கொண்டிருந்தேன்.


‘பிறந்து இரண்டு மூணு நாளான குட்டிய எப்படி காட்டுக்குள்ள விட்டுட்டு வருது?’


‘அதை நீங்க பசுட்ட தான் கேக்கனும்’ என்று சிரித்தார்.


‘விட்டுட்டு வருதே. யாராலயும் கண்டுபிடிக்க முடியறதில்ல. குட்டியும் தானா வெளிய வராது. தாய் வந்து சத்தம் கொடுத்தா மட்டும்தான் வரும். தாய்ப்பசுவோட வாசம், சத்தம்… இப்படி ஏதோ ஒரு கணக்கு அதுகளுக்கு இருக்கு. இப்படியே அஞ்சு பத்து நாள் போயிரும். அப்புறமா தான் கூட்டிட்டு வரும். இது ஏன்? இது எப்படி? ஒண்ணும் தெரியல. ஆனா, இது மாதிரி காட்டுக்குள்ளயே ஒளிச்சுக் கிடந்த குட்டிக சூட்டிப்பா இருக்குறத மட்டும் பாத்துருக்கோம். மத்த குட்டிகளை விட வெடச்சிக்கிட்டு நிக்கும். அது காளைக் குட்டியாவும் இருந்துச்சுன்னா கேட்கவே வேணாம், ஜல்லிக்கட்டுக்கு வாங்கிட்டு போவாங்க.


*


பழனியப்பன் மட்டுமல்ல, அன்றைக்கு அவரது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள், அந்தப் பக்கமாய் ஆடு மேய்த்து வந்தவர்கள் என்று அத்தனை பேரும், பசு குட்டியை ஒளித்து வைக்கும் சம்பவத்தை அதிஆச்சரியத்துடன் விவரித்துக் கொண்டிருந்தனர்.


எனக்கு ஆரம்பத்தில் இதில் அவ்வளவாய் மனசு ஒட்டவில்லை. மிகச் சாதாரணமான விஷயத்தை ரொம்பவும் பிரம்மாண்டமாய் கற்பனை செய்து கொள்கிறார்கள். அதுவும், மனிதர்களின் எளிய அறிவுக்கு விளங்காத சம்பவங்களை மாயாஜாலக் காட்சிகள் போல வர்ணிப்பது போலத்தான் இதுவும் என்று நினைத்திருந்தேன். ஆனாலும், அதை ஏன் எல்லோரும் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்று மட்டும் ஒரு சின்ன சந்தேகம் இருந்தது.


*


‘அந்தப் பசு தன் குட்டியை ஏன் புதருக்குள் மறைத்து வைத்துக் கொள்கிறது? பத்து நாட்கள் போல, அந்தக் கன்றுக்கு அது என்ன சொல்லித் தருகிறது? அல்லது அந்த நாட்களில் அக்கன்று அடையும் அனுபவம் என்ன?’


அந்தப் பசு தனது குட்டிக்கு, ‘நீயொரு விலங்கு; காட்டு விலங்கு!’ என்று சொல்லிக் காட்டிக் கொண்டிருக்கலாமோ? பழனியப்பனின் தொழுவத்திற்குக் கூட்டி வந்துவிட்டால், அது உடனடியாக வீட்டுப்பிராணியாக மாற்றப்பட்டுவிடும். எந்தக் குட்டியென்றாலும், பழனியப்பன் மாதிரியானவர்கள், முதல் காரியமாக அதை அள்ளி அணைப்பதுதான் வழக்கம்.


மார்போடு தழுவிக் கொஞ்சுவார்கள். பின், தொழுவத்துள் சிறை வைப்பார்கள். எந்த இடத்தில் தடவிக் கொடுத்தால் மாடுகள் கிறங்கி நிற்கும் என்பது பழனியப்பன்களுக்கு நன்றாகவே தெரிகிறது. எந்தவொரு பச்சிளங்கன்றையும் அப்படி ஒரு கிறக்கத்தில் ஆழ்த்துவது தான் அவர்களது முதல் சாமர்த்தியம்.


விலங்குகள் ஒன்றையொன்று கிறக்குவது உண்டா? நிச்சயமாய் உண்டு. ஆனால், அது பாலியல் வேட்கை மட்டுமே. மனிதன் மாடுகளுக்கு ஊட்டும் கிறக்கம் நிச்சயமாய் பாலுறவு அல்ல; இது வேறு வகை.


மாடுகளைத் தொடுவதன் மூலமும், அணைப்பதன் மூலமும், தடவுவதன் மூலமும் உருவாக்கப்படும் இந்தக் கிறக்கத்திற்கு கிராமத்தில் ‘சுணை’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். சுணங்குதல், குழைதல் என்று பொருள். ‘தொடக் குழைதல்’ உயிர்களின் அடிப்படைக் குணம். ‘மோப்பக் குழைதல்’ அதன் உன்னத நிலை. ஒரு விலங்கை, பிராணியாக மாற்றுவதற்கு இந்தச் சுணைதான் பிரதான உத்தியாகப் பயன்படுகிறது. மற்றவற்றைக் குழைத்தல்,நெகிழ்த்தல் என்று சொல்ல வேண்டும். கால்நடைகளாக மாற்றப்பட்ட பின்பு, இந்தச் சுணையிலிருந்து எந்த மாடும் தப்பியிருக்கவில்லை.


ஆனால், மலைமாடு தனது பச்சிளம் கன்றை புதர்களுக்குள் மறைத்து வைப்பதன் மூலம் இந்தச் சுணைக்கு மீறிய வாழ்க்கையை அதற்கு அறிமுகப்படுத்துகிறது. மனித வாடையற்ற, மனிதத் தொடுதலற்ற ஒரு ரகசிய வாழ்க்கை அது.


லெக்கனின் வார்த்தைகளில் சொல்வதாய் இருந்தால், அந்தக் கன்று தனது பிம்ப நிலையை (Imaginary Register) புதருக்குள் அனுபவமாகப் பெற்றிருக்கலாம். மனிதர்கள் அதனைத் தொட்டுத் தழுவி, அதன் பிம்பத்தைச் சிதறடித்து, குறியீட்டு நிலைக்கு (Symbolic Register) நகர்த்துவதற்கு முன், அது தனது ஆதி விலங்கு நிலையை உணர்ந்து கொண்டிருக்கலாம்.





Comments


bottom of page