top of page

காலிக்குறிப்பான்: எர்னெஸ்டோ லாக்லவ் – 2




4

கிளாட் லெவிஸ்ட்ராஸ், குறிப்பான்களை ‘மிதக்கும் குறிப்பான்’ என்று அழைக்கத் தொடங்கும் இடம் குறிப்பிடத்தகுந்தது. இந்த யோசனையை மார்ஷல் மாஸ் என்ற சமூகமானிடவியலாளரிடம் இருந்து அவர் தருவித்துக் கொள்கிறார். மார்ஷல் மார்ஸ் ‘Gift’ (பரிசு) என்ற புத்தகத்தை எழுதினார். இந்தப் புத்தகம், வடக்கு பசிபிக் தீவுகளில் வாழ்ந்த மக்கள் பற்றிய இனவரைவியல் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. அப்பழங்குடியினர் மத்தியில் காணப்படும் பரிசுப் பரிமாற்றத்தை மார்ஸ் ஆய்வு செய்கிறார்.


பரிசு கொடுப்பது பற்றி, மார்ஷல் மார்ஸின் மிக முக்கியமான அவதானம் இது – ‘இந்த உலகில் எந்தப் பரிசும் இலவசம் இல்லை’. நான் ஒரு பரிசைக் கொடுக்கும் போது நிஜமாகவே கொடுப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். அதனைப் பெறுபவரும் அதே போல பெறுவதில் மகிழ்ச்சியடைகிறார். பரிசு பெற்றவர் இந்த மகிழ்ச்சியை அப்படியே விட்டுவிடுவதில்லை. பரிசு கொடுத்த எனக்கு, அதே மாதிரியான ‘பெறுவதிலான’ மகிழ்ச்சியை கொடுப்பதற்கான தருணத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார். எதையும் கொடுத்துப் பெறுவதுதான் மனித இயல்பு. இதையே, மார்ஷல் மார்ஸ், பரிசு தருவது பண்பாட்டு வழக்கம் என்கிறார்.


வடக்கு பசிபிக் பண்பாட்டுப் பழக்கத்தைக் கொண்டுதான் இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. நம் திராவிடத் திருமண உறவுமுறை மூலமாகவும் இதனை விளங்கிக் கொள்ள முடியும். திராவிடத் திருமண முறையில்கூட பாரம்பரியப் பரிமாற்ற முறையொன்று புழக்கத்தில் உள்ளது. பெண்ணை ஒரு குடும்பத்தில் திருமணம் செய்து கொடுப்பதன் மூலம், அந்தக் குடும்பத்திலிருந்து இன்னொரு பெண்ணைத் திருமண உறவாகப் பெற்றுக் கொள்ளும் பழக்கம் நம்மிடம் உள்ளது.


உலகில், ஐந்து வகையான திருமண முறைகள் நடைமுறையில் உள்ளன. அவற்றுள் திராவிட திருமண முறையும் ஒன்று. திராவிடத் திருமண முறையின் தனித்துவம், பெண்களைக் குடும்பங்களுக்குள் பரிமாறிக் கொள்வது. இதைத் ’தாய்மாமன் உரிமை’ என்று சொல்வது வழக்கம். தாய்மாமனுக்குப் பெண்ணை எடுத்துக் கொள்கிற உரிமை இருப்பது போல, அவனுக்கு அப்பெண்ணை வழங்க வேண்டிய கடமை எல்லோருக்கும் உண்டு என்பதும் உண்மை. ஒரு குடியோ ஒரு குலமோ ஒரு குடும்பமோ அல்லது ஒரு நபரோ, மற்றொரு குடிக்கு, குலத்திற்கு, குடும்பத்திற்கு, நபருக்குப் பரிசு என்று எதையாவது கொடுக்கும்போது, கண்ணுக்குத் தெரியாத ‘நீ அதை;க கட்டாயம் எனக்குத் திரும்பச் செய்ய வேண்டும்’ என்ற கடமையையும் கொடுக்கிறது என்றே பொருள். இந்த கடப்பாட்டுணர்வை ‘பொட்லாட்ச்’ என்ற சடங்கின் மூலம் மார்ஷ்ல் மார்ஷ் விளக்குகிறார்.


கண்ணைக் கவரும் வகையில் ஒரு பரிசைக் கொடுக்கும்போது, கண்ணுக்குத் தெரியாத உடன்படிக்கை ஒன்றை நாம் ஏற்படுத்திக் கொள்கிறோம். அந்த உடன்படிக்கை, சரியான சந்தர்ப்பத்தில் பரிசளிப்பைத் திரும்பச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டே இருக்கிறது.


தாய்மாமன், பெண் குழந்தை பிறந்தது முதல் தொடர்ச்சியாக ‘செய்முறை’ செய்தபடியே இருக்கிறார். இப்படிச் செய்வதன் மூலம் அந்தப் பெண் மீதான திருமண உரிமையைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். அவருடைய அக்காள் / தங்கையைத் திருமணம் செய்து கொடுத்த தருணத்தில் இருந்தே இந்தச் ‘செய்முறை’ ஆரம்பித்துவிடுகிறது. அதாவது, அப்பெண்குழந்தையைக் கருவுறுவதற்கு முன்பிருந்தே ‘உரிமைப் பிரச்சினை’ தொடங்கிவிடுகிறது.

ஒரு பொருளைப் பரிசாகக் கொடுப்பதன் மூலம் நிர்ப்பந்தத்தையே உருவாக்குகிறார்கள். திரும்பச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம். அந்த நிர்பந்தம் பரிசுப்பொருளிளோ அல்லது வேறு எதிலுமோ ஸ்தூலமாக இல்லை. பரஸ்பரம் பரிசுகளைப் பரிமாறிக் கொள்ளும்போது, எந்த இடத்திலும் உடன்படிக்கை பற்றி பேசுவதில்லை. ஆனாலும், எல்லோரும் திரும்பச்செய்ய வேண்டிய ‘கடமையை’ உணரத் தவறுவதும் இல்லை. மொழியில் வெளிப்படுவதில்லையே தவிர, எல்லோராலும் உணரப்படுகிறது.


இந்த ‘வார்த்தையற்ற உணர்வை’ வடக்கு பசிபிக் பழங்குடிகள் ‘ஹாவ்’ என்று அழைக்கிறார்கள். ஒவ்வொரு முறை பரிசு கொடுக்கும் போதும் ‘ஹாவ்’ எனும் உணர்ச்சியும் கடத்தப்படுகிறது. ஹாவ், ஒவ்வொரு பரிசுப் பொருளுடனும் ஆன்மாவைப் போலச் செல்கிறது. பரிசைப் பெற்றுக் கொண்டவர் அந்த ‘ஹாவ்’ ஐ நிச்சயம் திருப்பித் தர வேண்டும் என்பதே விதி.


மார்ஷல் மார்ஸ், ‘ஹாவ்’ என்ற சொல்லுக்கு தனிப்பட்ட அர்த்தம் எதுவும் இல்லை என்பதையும் கண்டறிகிறார். பரிசு கொடுப்பதால் ஏற்படும் ‘திரும்பச் செய்ய வேண்டும்’ என்ற கட்டுப்பாடே ஹாவ். நம்மிடமுள்ள ‘மொய்’ பழக்கம் போன்றது. மொய் செய்யும்போது எல்லோருக்கும் மகிழ்ச்சி பரவுகிறது. ஆனால் ‘மொய் நோட்டை’ பார்க்கும்போதெல்லாம் ‘அதைத் திரும்பச் செய்ய வேண்டுமே!’ என்ற எண்ணம் மேலோங்கியபடியே இருக்கிறது. சொல்லப்போனால், இந்தக் கடப்பாட்டுணர்வு அந்தப் பரிசுப்பொருளிளோ பணத்திலோ இல்லை. இதையே வட பசிபிக் பழங்குடிகள் ஹாவ் என்ற உச்சரிப்பின்மூலம் விளக்குகிறார்கள். ‘ஹாவ்’ என்பதற்குத் தனியான அர்த்தம் எதுவும் இல்லை. ‘கடன்’ மாதிரியா என்றால் இல்லை; ‘கடமையா’ என்றால் அதுவும் இல்லை. அதுவொரு இயல்பு.


ஏன், தாய்மாமன் சீர் செய்தாக வேண்டும்? யாருக்கும் சொல்லத் தெரியாது. ஏன், தாய்மாமன் முறைப்பெண்ணை மணம் முடிப்பதற்கு முதல் உரிமை கொண்டாடுகிறான்? தெரியாது. அதே போல, இவ்விரண்டு உரிமைகளை மறுக்கவும் தெரியாது. தொடர்ந்து செய்தாக வேண்டிய கடப்பாட்டை தமிழர்கள் அனைவரும் உணர்கிறோம். இது, காலங்காலமாய் தொடரும் காரணகாரியங்களற்ற மூடநம்பிக்கை அல்லது பழக்கம் என்றும் சொல்வதற்கு இல்லை.


தாய்மாமனின் கோரிக்கையை ‘உரிமை’ என்று சொல்கிறோம்; அதிலொரு ‘நியாயம்’ இருப்பதாக நாம் உணர்கிறோம்; அது, அவரது ‘கடமை’ என்றும் சொல்கிறோம். வட பசிபிக் மொழியில் இவ்வனைத்திற்கும் ‘ஹாவ்’ என்று மட்டுமே பெயர். ஒரு வார்த்தைக்குப் பல்வேறு அர்த்தங்கள் இருக்க முடியும் என்று மார்சல் மார்ஸ் உணர்ந்த தருணம் இது. இந்த இடத்தில், மார்ஷல் மார்ஸ் தன் ஆய்வை நிறுத்திக் கொள்கிறார்.


இதனை வளர்த்தெடுக்கும் விதமாக பேசத் தொடங்குவது, லெவிஸ்ட்ராஸ். மார்ஷல் மார்ஸ் குறிப்பிடும் ‘ஹாவ்’ என்ற வார்த்தைக்குள் பொதிந்துள்ள பல்வேறு அர்த்தங்களைப் போன்ற ஒரு சூழலை நாம் ‘பரிசம்’ என்ற வார்த்தைக்குள் காணமுடியும். அதுவொரு பரிசு; உரிமை; உடன்படிக்கை; தீர்மானம்; நியாயம்; கடமையும் கூட. ‘பரிசம்’ போன்ற வார்த்தைகளைக் குறிப்பிட்டு, இவற்றிற்கு நிலையான அர்த்தம் எதுவும் இல்லை என்கிறார் லெவிஸ்ட்ராஸ்.


ஏன் நிலையான அர்த்தம் இல்லை? சசூர் குறிப்பிட்டது போல இந்த வார்த்தைகள் தனியாக அலைந்து கொண்டிருக்கின்றன. அந்தரத்தில், எந்தப் பிடிமானமும் இல்லாமல், மிதந்து கொண்டிருக்கின்றன. எந்த அர்த்தம் விரும்புகிறதோ அந்த அர்த்தம், கொஞ்ச நேரத்திற்கு அவ்வார்த்தையுடன் போய் ஒட்டிக் கொள்கிறது. உச்சரிப்புகளுக்கு, தீர்மானமாக இவை தான் அர்த்தம் என்று கூற முடியவில்லை என்பதால் லெவிஸ்ட்ராஸ் இதனை ‘மிதக்கும் குறிப்பான்’ என்று அழைக்க விரும்புகிறார்.


5


லெவிஸ்ட்ராஸைத் தொடர்ந்து, ழாக் லெக்கான் இக்கருத்தாக்கத்தை மேலும் வளர்த்தெடுத்தார். ‘மிதக்கும் குறிப்பான்களின் காலனி’ எவ்வாறு வடிவமைக்கப்பட்டிருக்கும் என்பது அவரது யோசனையாக இருந்தது. குறிப்பான்களின் வாழ்க்கை எத்தகையது என்று கூட இதை விளங்கிக் கொள்ளலாம். லெக்கனின் கற்பனையின் படி, அந்தக் குறிப்பான் காலனியில் ஒவ்வொரு குறிப்பானும் அடுத்தடுத்த குறிபான்களோடு கைகளைக் கோர்த்தவாறு நிற்கின்றன.


ஓர் உச்சரிப்பிற்கு நிறைய அர்த்தங்கள் சொல்லப்படுவதால், எந்த அர்த்தம் தனது அர்த்தம் என்ற திகைப்பு அவற்றிலிருந்து இன்னும் அகலவில்லை. இந்த நேரம், ஒரே மாதிரியான உச்சரிப்புகள் கொண்ட குறிப்பான்கள் குழுக்குழுவாகத் திரள ஆரம்பிக்கின்றன. அத்திரட்சிகளிலிருந்து மெல்ல மெல்ல, தலைமைக் குறிப்பான்கள் உருவாக ஆரம்பிக்கின்றன. ஏறக்குறைய ‘திக்கற்ற குறிப்பான்களின் தலைமைகள்’ இவை. இத்தலைமைக் குறிப்பான்களே திரட்சிகளிலுள்ள குறிப்பான்களை ஒன்றிணைக்கும் சக்தியாக உருமாறுகின்றன.


கொஞ்சம் கொஞ்சமாக, தலைமைக்குறிப்பான், திரட்சியின் மூலைக்கல்லாக மாறுகிறது. எந்தக்கல்லை உருவினால் ஒட்டுமொத்தக் கட்டடமும் சரிந்துவிடுமோ அந்தக் கல்லே மூலைக்கல். அந்த அளவிற்கு அது பிற கற்களைப் பிணைத்துக் கொண்டிருக்கிறது. குறிப்பான்கள் காலனியில், அர்த்தங்களில் இருந்து விலகி உச்சரிப்புகள் மட்டும் கூட்டம் கூட்டமாகத் திரளும்போது, அவற்றிலிருந்து உருவாகும் தலைமைக் குறிப்பானே, ‘பிற குறிப்பான்கள்’ தத்தம் குறிப்பீடுகளுடன் இணைவதற்கு உதவி செய்கின்றன. இந்தப் பணியின் போது, தலைமைக் குறிப்பான் மிக முக்கியமானதொரு உருமாற்றத்தை சந்திக்கிறது.


நிரந்தரக் குறிப்பீடுகள் இல்லாததால் தனித்து நிற்கும் குறிப்பான்களைத் தலைமைக் குறிப்பானே ஒழுங்குபடுத்துகிறது; குறிப்பானாக நீடித்திருக்கச் செய்கிறது. ஒவ்வொரு கருத்துப்புலப்படுத்தத் தருணத்திலும் அக்குறிப்பான்கள் குறிப்பீடுகளுடன் இணைவதற்கு இந்த ஒழுங்கும், இருப்பும் தேவைப்படுகிறது. இவ்வாறு குறிப்பான்களின் ஒழுங்கமைப்பைப் பேணும் செயல்பாட்டின்போது, அத்தலைமைக் குறிப்பான் தனது குறிப்பீடுகள் அனைத்தையும் இழந்து / துறந்துவிடுகிறது. பிறக் குறிப்பான்களின் அர்த்தத்திற்காக மெனக்கிடும் தலைமைக் குறிப்பானுக்கு அர்த்தமில்லாமல் போவது ஒரு வகையில் துர்ப்பலம், இன்னொரு வகையில் அதிபலம். ‘தலைமைக் குறிப்பான்’ என்ற தகுதிக்காக, தனது இயல்பையே அது மாற்றிக்கொள்கிறது. ‘குறித்தல்’ என்ற இயல்பை இழப்பதன் மூலம் ‘குறித்தலற்ற குறிப்பான்’ என்ற விசேஷத்தை அடைகிறது என்றும் விளக்கலாம். இப்படியான குறிப்பான்களை ழாக் லெக்கான் ‘Master Signifier’ (தலைமைக் குறிப்பான்) என்று அழைக்கிறார்.

சொகுசு மெத்தைகளை இழுத்துக் கட்டுவதற்காக, ஆங்காங்கே மேலும் கீழுமாக தைத்திருப்பார்கள்; அந்தத் தையல் புள்ளி மாதிரியானவை ‘தலைமை குறிப்பான்’ என்கிறார் லெக்கான். பஞ்சு அடைக்கப்பட்ட பொதிகளை, இப்படித் தையலிட்டு இறுக்கிக் கட்டினால் மட்டுமே அவை மெத்தைகளாக உருமாறுகின்றன. இல்லாதபட்சத்தில் பஞ்சு ஒரு பக்கமாகத் தேங்கி, மெத்தையின் வடிவத்தையே கலகலக்க வைக்கிறது. இறுக்கிக் கட்டப்பட்ட அந்தத் தையல் புள்ளிகளே பொதியை மெத்தையாக மாற்றுகின்றன.


இதை உதாரணமாகக் காட்டும் லெக்கான், குறிப்பான் கூட்டம் ஒரு பஞ்சுப் பொதி என்கிறார். ஒலிப்பொதி? அதை மெத்தையாக மாற்றும் வித்தையை தலைமைக் குறிப்பானே செய்கிறது. அதுவே மெத்தையின் ‘மையப்புள்ளிகள்’. அதுவே, குறிப்பான்களைக் கூட்டம் கூட்டமாகத் தக்கவைக்கிறது. இதனை முன்னிட்டு, அது தனது இயல்பான அர்த்தத்தையே கூட இழந்து நிற்கிறது.


(தொடரும்)



Comentários


bottom of page