top of page

காலிக்குறிப்பான்: எர்னெஸ்டோ லாக்லவ் – 3



இந்தக் கருத்தாக்கத்தை லாக்லவ் எவ்வாறு வெகுஜன அரசியல் செயல்பாட்டை விளக்கப் பயன்படுத்திக் கொள்கிறார் என்பது முக்கியம். மொழியியலாளர் சசூர் மொழியின் அமைப்பை விளக்கியது போல, மானுடவியலாளர் லெவிஸ்ட்ராஸ் பண்பாட்டின் அமைப்பாக்கத்தை விளக்கியது போல, உளவியலாளர் லெக்கான் நனவிலியின் அமைப்பை விளக்கியதைப் போல, லாக்லவ் வெகுஜன அரசியலின் கட்டமைப்பை விளக்க முயற்சிக்கிறார். இவற்றோடு சீசக் குறிப்பிடும், எல்லா நிகழ்வுகளின் அடியாழத்திலும் ஏதாவது ஒரு கருத்தாக்கம் விழுப்பொருளாகச் செயல்படுகிறது என்ற செய்தியையும் லாக்லவ் பயன்படுத்திக் கொள்கிறார்.


சசூர் சொல்வது போல், உச்சரிப்புகளுக்கும் அர்த்தங்களுக்கும் பெருத்த இடைவெளி உள்ளது. அவை தனித்தனியே இருப்பதோடு, காரணகாரிய விளக்கங்களுக்கு ஆட்படுவதும் இல்லை. இதனால், ஒரே மாதிரியான உச்சரிப்புகள் தங்களுக்குள் வலுவான பிணைப்பை ஏற்படுத்திக் கொள்கின்றன. அந்தப் பிணைப்பே தலைமைக் குறிப்பானை உருவாக்குகிறது; அப்பிணைப்பை தலைமைக் குறிப்பானே நிலைப்படுத்துகிறது. இவை அனைத்தும் ஏககாலத்தில் நடக்கின்றன – உச்சரிப்புகளின் பிணைப்பு, பிணைப்பிலிருந்து உருவாகும் தலைமை, அப்பிணைப்பை நிலைப்படுத்தும் தலைமை!


இத்தனை மொழியியல் களேபரங்களுக்கு மத்தியில், கருத்தியல் எங்கே நின்று கொண்டிருக்கிறது? கருத்தியலின்றி இத்தனைக் காரியங்களும் நடக்க சாத்தியமில்லை என்றால், கருத்தியலின் பங்கு என்ன என்ற கேள்விகளோடே லாக்லவ் தன் கட்டுரையை ஆரம்பிக்கிறார்.

தலைமைக் குறிப்பான், ஏனைய குறிப்பான்களின் அர்த்த சுட்டலுக்காகத் தனது அர்த்தத்தை இழந்து நிற்கிறது. ஆனால், அப்படி இழந்த பின்னும் குறிப்பானாகவே இருக்கிறது என்பதால், எண்ணிறந்த அர்த்தங்களைச் சுட்டவும் முடிகிறது. இப்படி, இயல்பில் அர்த்தம் துறந்தும், நடைமுறையில் பல அர்த்தங்களை சாத்தியப்படுத்தியும் செயல்படும் குறிப்பான்களை லாக்லவ் ‘காலி குறிப்பான்கள்’ (Empty Signifier) என்று அழைக்கிறார்.


குறிப்பான் குழுக்களுக்கு ஒழுங்கும், வடிவமும், இருப்பும் தரும் வேலையைக் காலிக்குறிப்பான்களே செய்கின்றன; அவையே, தலைமைக் குறிப்பான்களும் என்றால், இந்தத் தலைமை எவ்வாறு உருவாகிறது? அக்குறிப்பான் குழுவை இயக்கும் நியதி எது? அதன் தொடர் இயக்கத்தில் அரசியலுக்கு இடமுண்டா? உண்டு என்றால், அது எவ்வாறு வடிவெடுக்கிறது? ஒரு குழுவின் கருத்தியல் நிலைப்பாட்டு உருவாக்கத்தில் இந்த அரசியலின் பங்கு என்ன? இவ்வாறான தொடர் கேள்விகளுக்கு லாக்லவ் பதில் சொல்ல ஆரம்பிக்கிறார்.


குறிப்பான் ‘காலியாக இருக்கிறது’ என்றால் என்ன, என்பதே அவர் கேட்டுக் கொள்ளும் முதற் கேள்வி. காலியாக இருக்கிறது என்றால், குறிப்பீடின்றி காணப்படுகிறது என்று அர்த்தம் இல்லை. அந்தக் குறிப்பான் ஏற்கனவே குறைந்தபட்சம் ஒரு குறிப்பீட்டைச் சுட்டியிருந்து, தற்போது அப்படிச் செய்யாமல் இருக்கிறது என்று பொருள். அதாவது, ‘அர்த்தமற்றது அல்ல; முன்பு அர்த்தம் சுட்டி, இப்பொழுது சுட்டாமலிருக்கிறது’ என்று அர்த்தம்.


இதையே வரையறை போல இப்படிச் சொல்லலாம் – ஏற்கனவே அர்த்தங்களைச் சுட்டிக் கொண்டிருந்த குறிப்பானே சுட்டுவதை இழந்து / துறந்து காலிக் குறிப்பானாக உருமாற முடியும். ‘காலி’ என்ற வெற்றிடம் அங்கே இருக்க வேண்டியது அவசியம். அர்த்தமற்ற உச்சரிப்புகளுக்கு வெற்றிடங்கள் உருவாகுவது இல்லை. ஏனெனில், அங்கே ஏற்கனவே ஒன்றும் இல்லை. வெற்றிடம் தோன்றுவதற்கு ஏற்கனவே அங்கே ஏதாவது இருந்தாக வேண்டும். அந்த வகையில், காலிக்குறிப்பான்களின் முதல் குணாம்சம், ஏற்கனவே அர்த்தத்தைச் சுட்டி, பின்னர் சுட்டாமல் இருப்பது.


ஓர் உச்சரிப்பு, அர்த்தங்களைச் சுட்டாமல் எப்படி மொழியினுள் நீடித்திருக்க முடியும்? ஓர் உச்சரிப்பு அர்த்தத்தைச் சுட்டவில்லை என்றால் அது மொழியினுள் இல்லை என்று பொருள். ஆனால், இங்கோ எதையும் சுட்டாத உச்சரிப்பு இன்னமும் வார்த்தையாக நீடிக்க முடிகிறது.

இதை இப்படிச் சொல்லலாம். எந்தவொரு சொல்லின் சாத்தியமும் அர்த்தங்களைச் சுட்டுவது மட்டுமே. ஓர் உச்சரிப்பு ஒரே ஒரு அர்த்தத்தை மட்டுமே சுட்டுகிறது என்றால் குறைந்த அளவு சாத்தியங்களோடு செயல்படுகிறது என்று பொருள். அதுவே, நிறைய அர்த்தங்களைச் சுட்டினால் அதீத சாத்தியமுடையது என்று பொருள். ஆனால், எந்த வகையிலும், சுட்டுவது மட்டுமே உச்சரிப்பின் சாத்தியம். காலிக்குறிப்பான் போன்ற ஒன்று, எந்த அர்த்தத்தையும் சுட்டவில்லை என்றால், அதை அசாத்தியம் என்று சொல்லலாமா?


சொல்லலாம் என்றால், ஒரு சொல் எப்போது அசாத்தியமான வேலையைச் செய்ய ஆரம்பிக்கிறது என்ற கேள்வி எழுகிறது. இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல ஆரம்பிப்பதுதான் லாக்லவின் படைப்பூக்கம். ஒரு சொல்லின் சாத்தியம் நமக்குத் தெரியும். ஒரு சொல் எப்படி எப்படியெல்லாம் அர்த்தங்களைச் சுட்டும் என்பது நமக்குத் தெரியும். ஒரு சொல்லின் அனர்த்தத்தை எப்படி விளக்குவது? ஒரு சொல்லுக்கு அனர்த்தம் இருக்க முடியுமா? ஒரு சொல்லுக்குச் சாத்தியம் இருக்க முடியும் என்றால் அதற்கு அசாத்தியமும் இருக்க வேண்டும் என்பதுதான் தர்க்க நியதி. அப்படி என்றால், அசாத்தியம் அல்லது அனர்த்தம் என்பது என்ன?


வழக்கமாய், சாத்தியங்களை வரிசைப்படுத்தி நாம் பார்த்திருக்கிறோம். குறைந்த அளவு சாத்தியத்திலிருந்து அதன் உச்சபட்ச சாத்தியம் வரைக்கும். இந்த வரிசையில் உச்சபட்ச சாத்தியத்திற்கு அப்பால் இருப்பது எல்லாமே அசாத்தியம்தான். அந்த இறுதி சாத்தியம் ஒரு எல்லை மாதிரி. அப்படியானால், அசாத்தியம் எல்லைக்கு அப்பால் இருக்கிறது என்று பொருள். இனி நாம் இப்படிச் சொல்லிப் பார்ப்போம்: ஒரு மொழியில் எதுவெல்லாம் சாத்தியம் என்று ஒரு எல்லையைக் காட்ட முடியும் என்றால், அவ்வெல்லைக்கு அப்பால் இருப்பது அனைத்தும் மொழியின் அசாத்தியம்.

இந்தத் தர்க்கத்தின் படி, ஒரு சொல் அசாத்தியத்தை நிகழ்த்த வேண்டும் என்றால் அது முதலில் மொழியின் எல்லையைத் தாண்டியாக வேண்டும். மொழியின் எல்லையைக் கடந்தால் என்ன இருக்க முடியும்? மொழியின் எல்லையைக் கடப்பது நடக்கிற காரியமா? ’மொழியின் எல்லையைக் கடத்தல்’ பற்றி டெல்யூஸ் பேசியிருக்கிறார். அவரது கணிப்பின்படி, மொழியின் எல்லையைக் கலைஞர்களால் கடக்க முடியும். அவ்வாறு கடக்கும் கலைஞன், மொழிக்கு அப்பால் மௌனத்தையே சந்திக்கிறான். சப்தமின்மை. சப்தத்திலிருந்து சப்தமின்மைக்கு வந்து சேர்வதாலேயே, மொழியின் எல்லையைக் கடந்த கலைஞனிடம் மொழி திக்கவும் திணறவும் ஆரம்பிக்கிறது. மொழியின் எல்லைக்கு அப்பால் வந்து நிற்கும் கலைஞன் அசாத்தியங்களுக்குள் நிற்கிறான் என்றே சொல்ல வேண்டும். இந்த அசாத்தியம்தான் தலைமை குறிப்பான் அல்லது காலிக் குறிப்பானை உருவாக்குகின்றது.

ஒரு மொழியின் ஒலித்துணுக்குகள் எத்தனை என்று நமக்குத் தெரிகிறது. எல்லா மொழிகளும் தேர்ந்த ஒருங்கிணைப்புடன் செயல்படுகிறது என்றும் தெரிகிறது. ஆனால், மொழியின் தொடுவானம் எது, எல்லை எது என்று கேட்டால் நமக்குச் சொல்லவரவில்லை. ஒரு பொருளின் எல்லையை எவ்வாறு வரையறுப்பது? அப்பொருளிற்கு அப்பால் என்ன இருக்கிறது என்று சொல்ல முடிந்தால், அப்பொருளின் எல்லையை வரையறுப்பது எளிது. ஒரு நாட்டின் எல்லையை, அண்டை நாட்டைக் கொண்டு தீர்மானிப்பது போல. தனது ‘பிறர்’ யார் என்று சொல்வதன் மூலம் தன்னை வரையறுத்துக் கொள்ளும் சமூகத்தைப் போல. இப்படிச் சொல்ல முடிந்த எல்லையை, ஒரு சொல் கடக்கும்போது அசாத்திய நிலையை எட்டுகிறது. அந்த நேரம் அச்சொல் ஏகாந்த வடிவெடுக்கிறது. அதாவது, தனது அர்த்தங்களை முற்றிலுமாக இழந்து / துறந்து ‘இல்லா நிலையை’ அடைகிறது. இப்படியொரு வெற்றிட அசாத்தியத்தை அடையும் குறியையே காலிக் குறிப்பான் என்று அழைக்கிறோம்.


எல்லைகளை விலக்குகளே தீர்மானிக்கின்றன என்கிறார் லாக்லவ். விலக்குகள் வேலி போல. தோட்டத்திற்கான வேலி (உணவுப்பட்டியலிலிருந்து) விலக்கப்பட்ட தாவரங்களால் அமைக்கப்படுகிறது. விலக்கு, இங்கே பாதுகாப்பு அரண். இந்த அரணை மீறுகிறவர் சமூகப் பாதுகாப்பை இழக்கிறார் என்று அர்த்தம். ஏனெனில், விலக்குகளை மீறுகிறவர், எல்லையை மீறுகிறார். சாத்தியத்திற்கும் அசாத்தியத்திற்கும் இடையில் இந்த விலக்குகள் செயல்படுகின்றன.

உறவுமுறை அமைப்பு இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக இருக்கமுடியும். ஒவ்வொரு உறவுமுறை அமைப்பும், திருமண உறவுகள் ரத்த உறவுகள் என்று தங்களை வகைப்படுத்திக் கொள்கின்றன. உறவுமுறை அமைப்பின் சாத்தியம் ‘திருமணம்’ என்ற் அங்கீகரிக்கப்பட்ட புணர்ச்சி. இச்சாத்தியத்திற்கு ஓர் எல்லை உண்டு; அந்த எல்லையைத் தகாப்புணர்ச்சி என்ற விலக்கு தீர்மானிக்கிறது. ரத்த உறவுகளுக்குள் நிகழும் எந்தவொரு பாலியல் உறவும் விலக்கப்பட்டிருக்கிறது. இந்த விலக்கே ஓர் உறவுமுறை அமைப்பை இன்னொரு அமைப்பிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. இத்தகைய விலக்குகள் விவாதத்திற்கு அப்பாற்பட்டவை என்பது சூட்சுமம். அதாவது, ஒழுங்கமைப்புகளின் எல்லைகளைத் தீர்மானிக்கும் விதிகள் பூரண நம்பிக்கை சார்ந்தவை; இடுகுறித்தன்மையானவை; எந்தவொரு விவாதத்திற்கும் அப்பாற்பட்டவை. இதன் காரணமாகவே, அவை விலக்குகளாகவும் அறியப்படுகின்றன.


மொழியின் எல்லையையும் இது போன்ற விவாதத்திற்கு அப்பாற்பட்ட விலக்குகளே தீர்மானிக்கின்றன. அத்தகைய விலக்குகளை யாராலும் உச்சரிக்க முடியாது என்பதுதான் மொழியின் துர்பலம். இவ்வாறு உருவாகும் மொழியின் எல்லையை யாராலாவது பேசி விட முடிந்தால், அது எல்லை என்ற அந்தஸ்தை இழந்துவிடுகிறது. அதற்கும் அப்பால், ‘பேச முடியாத’ இன்னொரு எல்லையை உருவாக்குகிறது. இப்படியான விலக்கை ஒரு சொல் அனாயசமாகக் கடந்து செல்லும்போதே அசாத்தியநிலை உருவாகிறது. விலக்கைக் கடந்து அசாத்தியத்தை எட்டும் சொல்லின் அர்த்தங்கள் ஒரு கணத்தில் இல்லாமல் ஆகின்றன. அச்சொல், காலியாகிறது.

ஊர்த்தெய்வம் அல்லது காவல்தெய்வத்தை யோசித்துப்பாருங்கள். ஒவ்வொரு ஊரின் எல்லையையும் காத்து நிற்பதாய் நம்பப்படுகிற இத்தெய்வங்களின் மீது ஏற்றப்பட்டுள்ள நம்பிக்கைகளும் அவை தொடர்பான விலக்குகளும் அளப்பரியன. மானுடவியலாளர் வேலன்டைன் டேனியல் ‘Fluid Signs’ என்று நூலில் விவாதிக்கும் செய்தி நமக்குப் பயன்தரக்கூடும். தமிழர்கள் ‘ஊர்’ என்றால் என்ன நினைக்கிறார்கள் என அவர் இந்நூலில் விவரிக்கிறார். ‘உங்கள் கிராம எல்லை எது?’ என்று கேட்க, மக்கள் கிராம நிர்வாக அலுவலகப் பதிவேட்டிலுள்ள ராஜாங்க எல்லைகளை அடையாளம் காட்டுகிறார்கள். அதே மக்களிடம் ‘ஊர் எல்லை எது?’ என்று கேட்டால் வேறொரு பதில் கிடைக்கிறது. இப்பொழுது அவர்கள் நீரோடை, சுடுகாடு, காவல் தெய்வக் கோவில் போன்ற பண்பாட்டுத் தளங்களை அடையாளம் காட்ட ஆரம்பிக்கிறார்கள்.


அந்தத் தளங்களை இணைக்கும் ஒரு அமானுஷ்ய பாதையைக்கூட கற்பனையாக அவர்களால் சொல்லமுடிகிறது. இந்தப் பாதை மனிதர்களுக்கானது இல்லை. அக்காவல் தெய்வம் நடமாடும், வேட்டைக்கு செல்லும் பாதை இது என்கிறார்கள். எனவே, மனைதர்களுக்கு விலக்கப்பட்டது. இந்தக் காவல்தெய்வ வேட்டைப் பாதையையே ஊரின் எல்லை என்கிறார்கள். திருவிழா நேரங்களில் ‘ஊர்சாட்டி‘யதற்குப் பின் ஊரார் யாரும் எல்லையைத் தாண்டக்கூடாது என்பதும், வெளியாட்கள் உள்ளே வரக்கூடாது என்று சொல்வதும் இந்த எல்லையை மனதில் கொண்டு மட்டுமே. யாராலும் தாண்ட முடியாத, யாரும் தாண்டக் கூடாத எல்லை இது. அப்படித் தாண்டுவது அசாத்தியம் கூட.


இந்த அசாத்தியத்தை நிகழ்த்தி உருவான காலிக்குறிப்பான் பிற குறிப்பான்களின் இருத்தலை உறுதி செய்கிறது. இதன்மூலம், அவற்றின் குறித்தலையும் நிர்வகிக்கத் தொடங்குகிறது. காலிக்குறிப்பான் தானே நேரடியாய் குறித்தலில் ஈடுபடுவதில்லையே தவிர, ஏனைய குறிப்பான்களின் ஆணையம் போலச் செயல்படத் தொடங்குகிறது. இதிலொரு குழப்பமான அதிகராச் செயல்பாடு உருவாகி வருவதை இந்நேரம் நீங்கள் உணர்ந்திருக்க முடியும். நேரடிக் குறித்தலில் ஈடுபடாமல் தவிர்க்கும் காலிக்குறிப்பான், ஏனைய குறிப்பான்களின் குறித்தலை ஒழுங்குபடுத்தும் மறைமுக அதிகாரத்தைக் கொண்டிருக்கிறது. ஆச்சரியப்படும் வகையில், இம்மறைமுக அதிகாரச் செயல்பாடு ஒரு பக்கம் தீவிர ஜனநாயகத் தன்மையை வெளிப்படுத்துகிறது; மறுபக்கம், காலிக்குறிப்பானிடம் சேகரமாகும் ‘மறைமுக அதிகாரம்’ ஏனைய குறிப்பான்களின் ‘வேட்கைப் பொருளாக’ உருமாறி வலுவான முரணை உருவாக்குகிறது.


காலிக்குறிப்பானின் நபுஞ்சகமே வேட்கைப்பொருள். வெற்றிடத்தில் குவிக்கப்படும் எந்த அதிகாரமும் அளவிலா மோகத்தைக் கிளர்த்தக்கூடியது. அவ்வதிகாரக் குவியலே தங்களது குறித்தலைச் சாத்தியப்படுத்துகிறது என்பதை உணர்ந்தாலும், அதைக் கைப்பற்றிவிடும் வேட்கையிலிருந்து எந்தக் குறிப்பானாலும் தப்ப முடிவதில்லை. ஒன்று, அதனைச் சொந்தம் கொண்டாட நினைக்கிறது அல்லது அழித்துவிட. நோக்கங்கள்தான் வேறு வேறு. சொந்தம் கொண்டாடுவதும் அழித்து விடுவதும் செயலளவில் ஒன்றுதான் – காலிக் குறிப்பானை இட்டு நிரப்புதல்.


காலிக்குறிப்பானைக் கபளீகரம் செய்வதற்காகக் குறிப்பான்களுக்குள் நிகழும் மோதல்களைக் கருத்தியல் முரண்களாகச் சித்தரிக்கிறார் லாகலவ். ஒவ்வொரு குறிப்பானும் அதனதன் கருத்தியல் நிலைப்பாட்டிற்கான ஆதரவைத் திரட்டுவதற்கே தொடர்ந்து முயற்சி செய்கிறது. முடிந்தால் பிற கருத்தியல் நிலைப்பாடுகளை வெற்றி கொள்ளவும். காலிக்குறிப்பான் தீவிர ஜனநாயகச் செயல்பாட்டிற்கு தரும் ஆதரவினால் மட்டுமே முரண்படும் கருத்தியல்கள்கூட ஒரே தளத்தில் இணைய முடிகின்றன. ஆனாலும் அவை, ரகசியமாய் காலிக்குறிப்பானை வென்றெடுக்கவே விரும்புகின்றன. ஏனெனில், எந்தக் கருத்தியல் காலிக்குறிப்பானை நிரப்புகிறதோ அதுவே சமூகத்தில் மேலாண்மை பெறத் தொடங்குகிறது.


காலிக்குறிப்பான்களை நிரப்புவதற்காகக் குறிப்பான்களால் செய்யப்படுகிற முயற்சிகளே அரசியல் முரண்களைத் தோற்றுவிக்கின்றன. அரசியல் முரண்களே சமூகத்தைத் தொடர்ந்து இயக்கத்திலும் வைத்திருக்கின்றன; அதே போல, சமூக மாற்றத்திற்கான சாத்தியங்களையும் உருவாக்குகின்றன. ஒரு சமூகம் ஜனநாயகத்தன்மையோடும் சமத்துவத்திற்கான நம்பிக்கையோடும் நகர்வதற்கு காலிக்குறிப்பான்களை மையமிட்ட முரண்கள் இன்றியமையாதவை. இம்முரண்பாடுகள் முற்றுகிற வேளையில், ஏதாவதொரு கருத்தியல் அக்காலிக்குறிப்பானை நிரப்புகிறபட்சத்தில், சமூகம் தனது இயங்குவிசையை இழந்து விடுகிறது.


இந்தியச் சமூக வரலாற்றில் காலிக்குறிப்பான் கபளீகரத்தை சமயங்களே வெற்றிகரமாக நிகழ்த்தியிருக்கின்றன. முழுக்க முழுக்க பண்பாட்டிலிருந்து மட்டுமே உருவாகி வரும் காலிக்குறிப்பான்களின் முக்கியத்துவத்தையும் இயல்புகளையும் விளங்கிக் கொண்டவை சமய நிறுவனங்கள் மட்டுமே என்று சொல்ல வேண்டும்.


காலிக்குறிப்பானை நிரப்புவதற்கான யுக்தி மிக எளிமையானது. காலிக்குறிப்பான் திகைந்து வருவதில் தொடங்கி வரிசையாக நிகழும் சமூக அசைவியக்கங்களையும் அரசியல் நடவடிக்கைகளையும் ஒருங்கிணைக்கும் கதையாடல்களை நம்பத்தகுந்த வகையில் உற்பத்தி செய்ய முடிந்தால் மட்டும் போதும். அதாவது ஒரு வலைப்பின்னல் போன்ற கதையாடல்கள். இத்தகைய வலைப்பின்னலை உருவாக்க முடிகிற பட்சத்தில் காலிக்குறிப்பானையும் அதொயொட்டி நிகழ்ந்த சம்பவங்களையும் அவ்வலைப்பின்னலால் திறம்பட விளக்க முடிகிறது. இந்திய வரலாற்றில் சமய நிறுவனங்களின் பங்களிப்பு இத்தகைய கதையாடல் வலைப்பின்னலை நிர்வகிப்பது மட்டுமே.

இவ்வாறு உருவாக்கப்படும் கதையாடல்கள், காலிக்குறிப்பான்களை வலுவான சமய அடையாளங்களாக உருமாற்றுவதோடு, அதன் விளைவாக நிகழ்ந்த அனைத்துப் பண்பாட்டுச் செயல்பாடுகளையும் சமயச் செயல்பாடுகளாக விவரிக்க ஆரம்பிக்கின்றன. ஓர் உதாரணத்திற்கு அம்மன் வழிபாட்டு நிகழ்வுகளைக் கவனத்தில் கொள்ளுங்கள். உள்ளூரளவில், ஆங்காங்கே உருவாகியிருக்கக்கூடிய தாய்தெய்வ வழிபாடுகள் ஒரு தருணத்தில் ‘அம்மன்’ என்ற காலிக்குறிப்பானாகப் பரிணமிக்கும்போது, அவ்வம்மனை சிவ-பார்வதி கதையாடல்களின் மூலம் சைவக் கடவுளாக உருமாற்றிவிட முடிகிறது. அதே போல், அய்யனார், சாஸ்தா, கருப்பு, முனி போன்றோர் வட்டார தெய்வ நம்பிக்கை வடிவங்களாகத் திகையும்போது, அவர்களையும் கதையாடல்கள் மூலம் மிக எளிதாக சைவ / வைணவ / இவ்விரண்டின் இணைப்பு வடிவங்களாக நம்ப வைக்க முடிகிறது. இப்படிப் பின்னப்படும் கதையாடல்கள், ஒரே நேரத்தில் காலிக்குறிப்பானை நிரப்புகின்றன, அதனையொட்டி விளைந்த பண்பாட்டு நிகழ்வுகளுக்குச் சமயச்சாயம் ஏற்றுகின்றன, தற்செயல்களை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவை என்று விளக்குகின்றன.


சைவம், வைணவம் போன்ற வைதீக சமயங்கள் மட்டுமல்ல, சமணமாகட்டும் பெளத்தமாகட்டும் ஆசீவகமாகட்டும் எல்லாச் சமய நிறுவனங்களும் இக்கதையாடல் உற்பத்தியில் ஈடுபடுகின்றன. அவற்றுள் எதன் கதையாடல் அரசாண்மையின் ஆதரவைப் பெறுகிறதோ, வெகுஜன உணர்வுகளைப் பூர்த்தி செய்கிறதோ அது காலிக்குறிப்பானை வெற்றிகரமாக ஆக்கிரமிக்கிறது.


அரசாண்மையின் ஆதரவைப் பெறுவதைவிடவும் வெகுஜன உணர்வுகளைப் பூர்த்தி செய்வதே தலையானதும் இன்றியமையாததும் ஆகும். ‘வெகுஜன உணர்வுகள்’ என்று சொல்லும்போதே ஒரு விஷயம் தெளிவாகி விடுகிறது – வெகுகாலமாக நம்பி வருவதைப் போலக் கதையாடல் உருவாக்கம் என்பது பூரண அறிவுச்செயல்பாடு அல்ல; அது தன்னிச்சையாய், எவ்வித முன் தயாரிப்புகளும் தேவைப்படாமல், நனவிலி நிலையிலேயே பெரும்பாலும் நடைபெறுகிறது. நிகழ்ந்த அத்தனைத் தற்செயல்களையும் இக்கதையாடல்கள் எவ்வாறு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவை என்று விளக்குகின்றனவோ அதே போல், தற்செயலாய் வடிவமைக்கப்படும் தன்னையும் கூட அது ‘நன்கு திட்டமிடப்பட்டதாய்’ நம்ப வைக்கிறது.


இதற்கு மாற்றாக, காலிக்குறிப்பானை எவ்வளவு தூரம் காலியாக வைக்க முடிகிறதோ அவ்வளவு தூரம் தீவிர ஜனநாயக நடவடிக்கைகளைத் தக்கவைக்க முடியும் என்று லாக்லவ் நம்புகிறார். பலதரப்பட்ட அதிருப்தி குரல்களும் ஒருங்கே குழுமுவதற்கான தளத்தை இவ்வெகுஜன அரசியல் சூழலில் காலிக்குறிப்பான்களே வழங்க முடியும் என்று சொல்லும்போது, அவரது கோரிக்கை சரியானதாகவே தோன்றுகிறது. அப்படியொரு கைப்பற்றப்படாத அதிகார மையம் நிலவுகிற சமூகத்தில் முரண்பட்ட அரசியல் நோக்கங்களைக் கொண்டவர்கள் தங்களையறியாமலேயே ஓர் உரையாடலுக்கும் விவாதத்திற்கும் வந்து சேர்கிறார்கள் என்பது தர்க்கரீதியாகவும் சாத்தியமெனப்படுகிறது.


ஆனால், காலிக்குறிப்பான்கள் வரலாற்றின் ஒவ்வொரு தருணத்திலும் ஏதாவதொரு வகையில் நிரப்பப்பட்டே வருகின்றன. அவற்றைக் கைப்பற்ற நடைபெறும் மோதலே அரசியல் முரண் என்பதால், ஏதாவதொரு கருத்தியலின் வெற்றி தவிர்க்க முடியாதது என்பதையே வரலாறு நமக்குச் சுட்டுகிறது. அதிலும், இந்தியச் சமூக வரலாறு, சமயங்களின் மென் அடிப்படைவாதக் கருத்தியலே அவ்வெற்றியை அடைகிறது என்ற அபாயத்தையும் நமக்குச் சொல்லத் தவறுவதில்லை.











Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page