மாற்று வரலாற்றுவரைவியலில் கடந்தகால சம்பவங்களை அல்லது நிகழ்வுகளைக் கற்பனை செய்வதில் சில சிக்கல்கள் உள்ளன. உதாரணமாய், பூர்வ பெளத்தர்களை ‘பறையர்கள்’ என்று சொல்லி இழிவுபடுத்தினார்கள் என்பதை நிரூபிக்க விரும்பும் அயோத்திதாசர், அதற்கொரு சம்பவத்தைக் கற்பனை செய்கிறார். அந்த சம்பவத்தில் வேஷ பிராமணர்களும், பூர்வ பெளத்தர்களும், பொதுமக்களும் கதாபாத்திரங்களாக இடம் பெறுகின்றனர். இந்த சம்பவமே ஒட்டுமொத்த 'இந்திர தேச சரித்திரத்தையும்’ தாங்கி நிற்கிறது.
பறையர் என்ற சாதி அடையாளம் திணிக்கப்பட்ட அடையாளம் என்று வாதிட அந்த சம்பவம் துணை செய்கிறது. தீண்டாமை ஒரு தண்டனையாக பெளத்தர்கள் மீது விதிக்கப்பட்டத்து என்பதற்கான காரண காரியங்களை அந்தச் சம்பவமே வழங்குகிறது. அதாவது, அந்த நிகழ்ச்சியே வரலாற்றை ‘சரிவிற்கு முன்’, ‘சரிவிற்குப் பின்’ என்று இரண்டாக வகிரவும் உதவுகிறது. (வரலாறு ஏன் எப்பொழுதும் இரண்டாகவே பிளக்கிறது? அது நேர்கோடு இல்லையென்றால், ஓங்கி ஒரு வெட்டு வெட்ட, மூன்றாய் நான்காய் அல்லவா பிளவுபட வேண்டும்?)
ஆனால், தேவேந்திரர் வீழ்த்தப்பட்ட சரித்திரத்தில் இப்படியொரு சம்பவத்தை நம்மால் கட்டமைக்க முடியவில்லை. அதற்கான காலவெளி திரண்டு நிற்கிறது என்றாலும், சம்பவமென்று எதுவும் உருவாகவில்லை. உதாரணமாய், பள்ளு இலக்கியங்கள் எழுதப்பட்ட பின்னரே ‘பள்ளர்’ என்ற அடையாளம் தமிழ்ச்சூழலில் அறிமுகமாகிறது என்பதை அனுமானிக்க முடிந்தாலும், அப்படி நிகழ்ந்த சம்பவத்தை உங்களால் கற்பனை செய்ய முடியவில்லை. என்ன நோக்கத்திற்காக அல்லது காரணத்திற்காக மள்ளர் என்ற பெயர் பள்ளர் என்று மாற்றப்பட்டது என்பதை விளக்கும் மைய சம்பவம் அங்கே இல்லை.
இப்படியான மைய சம்பவம், வாய்மொழி அல்லது எழுத்து ஆதாரங்களிலிருந்து கிளம்பி வருவது வழக்கம். அயோத்திதாசருக்கு அது ‘நாரதிய புராண சங்கைத் தெளிவில்’ வாய்த்தது. கூடுதலாக, இதே பாணி சம்பவத்தை பிரதிபலிக்கும் பறையர் சாதித் தோற்றப் புராணங்களும் நமக்குக் கிடைக்கின்றன (பார்க்க, ‘போலச்செய்தலும் திரும்பச்செய்தலும்’ என்ற கட்டுரை, ‘நான் ஏன் தலித்தும் அல்ல?’ என்ற நூலில், டி. தருமராஜ், கிழக்கு பதிப்பகம், 2015). இதன்மூலம், அயோத்திதாசர் சொல்லும் ‘பறையப் போகிறார்கள் நிகழ்ச்சி’ காரணகாரிய வலுவுடன் உருவாக்கப்பட்டுவிடுகிறது. தேவேந்திரர் கதையில், மள்ளரிலிருந்து பள்ளராக தரமிறக்கப்பட்ட சம்பவம் குறித்து எழுத்துப் பதிவு எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. மக்களுடைய ஞாபகங்களிலோ அப்படியொன்று சுத்தமாக இல்லவே இல்லை.
இது முக்கியமான விஷயமொன்றை நமக்குச் சொல்கிறது: எந்தவொரு வரலாறும் ஞாபகங்களிலிருந்தே உருவாக்கப்படுகிறது. அப்படி உருவாக்கப்படும் வரலாறு, ஞாபகத்தைக் கொன்றும் விடுகிறது என்று பியர் நோரா சொல்வதை நாம் நேர்ப்பொருளில் விளங்கிக் கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை. அயோத்திதாசரின் விஷயத்தில், அவர் எழுதும் ‘இந்திர தேச சரித்திரம்’ பறையர் மத்தியில் வழங்கி வரும் ‘என் தம்பி பாப்பான்’ என்ற வாய்மொழி ஞாபகத்தை வெற்றிகரமாமக் கொன்று விடுகிறது.
ஆனால், தேவேந்திரர் புராணத்தில் மள்ளர்கள் பள்ளராக்கப்பட்டனர் என்பதற்கான வாய்மொழி ஞாபகங்கள் கிடைக்கவில்லையே தவிர, அந்த விஷயத்தை நெடுநாளாய் மறந்திருந்தோமே என்று தேவேந்திர சமூகம் அங்கலாய்க்க தொடங்கியிருக்கிறது. பழைய ஞாபகங்களைக் கொல்வதும் மறதியைக் கண்டுபிடிப்பதும் ஏறக்குறைய ஒன்று.
コメント